ஓவியா 
சினிமா

Oviya : வெளியான அந்தரங்க வீடியோவும், ஓவியாவின் ‘ENJOY’ பதிலடியும்!

நம் சமூகத்தில் மற்றவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்த்து, அவற்றை கேலி செய்வது தொடர்ந்து வழக்கமாகிவருகிறது. இந்த சூழலில் ஓவியா போன்ற ஒரு நடிகை அதை மிக எளிதில் தாண்டி சென்று, தன்னுடைய வழக்கமான வழியில் அதை எதிர்கொள்வதுதான் அவரைப் பாராட்டவைக்கிறது.

Kavitha

ஓவியா… தமிழ் பொழுதுபோக்கு ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்த பெயர். ‘களவாணி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர், ‘பிக் பாஸ்' மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். பிக் பாஸ் வீட்டுக்குள் அவரின் வெளிப்படையான நடைமுறைகளும், எதற்கும் தன் மனசாட்சியை மட்டும் துணையாக வைத்துக்கொண்டு எடுத்த முடிவுகளும் ரசிகர்களின் இதயத்தில் ஓவியாவுக்கு தனி இடத்தைப் பெற்றுத்தந்தது. ‘ஓவியா ஆர்மி' பெரும் ரசிகர் படையே உருவானதெல்லாம் யாருக்கு நிகழாத ஒரு அதிசய நிகழ்வு!

இந்நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தைச் சுற்றிவரும் ஓவியாவின் அந்தரங்க வீடியோ பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ஓவியாவை இகழ்ந்தும், ஆபாசமாக விமர்சித்தும் கேலி, நையாண்டி, மற்றும் ஒழுங்கற்ற கமென்ட்களை பலரும் பதிவு செய்துவருகிறார்கள். ஒரு தனிநபரின் அந்தரங்கத்துக்குள் நுழைகிறோம் என்கிற அடிப்படை அறிவுகூட பலருக்கும் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஓவியா

இந்த சூழ்நிலையில் இந்த வீடியோ லீக் விவகாரத்தை ஓவியா எதிர்கொள்ளும் எல்லா பெண்களுக்கும் ஒரு பாடமாக மாறியிருக்கிறது. ஓவியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பற்றி கேள்வி எழுப்பிய ரசிகரின் கருத்துக்கு, ஓவியா ‘என்ஜாய்’ என்று பதில் அளித்திருக்கிறார். இன்னொரு நபர் "வீடியோ வெறும் 17 விநாடிதானா?" என்று கேலி செய்தபோது, அதற்கும் ஓவியா, “நெக்ஸ்ட் டைம்” என்று எமோஜி சேர்த்து பதில் அளித்திருக்கிறார். இது ஓவியாவின் மனபக்குவத்தையும், அசாத்திய மன வலிமையையும், எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் வெளிப்படுத்துகிறது.

நமது சமூகத்தில் மற்றவரின் அந்தரங்கத்தை பார்த்து, அவற்றை கேலி செய்வது தொடர்ந்து வழக்கமாகிவருகிறது. இந்த சூழலில் ஓவியா போன்ற ஒரு நடிகை அதை மிக எளிதில் தாண்டி சென்று, தன்னுடைய வழக்கமான வழியில் அதை எதிர்கொள்வதுதான் அவரைப் பாராட்டவைக்கிறது.

ஓவியா

ஓவியா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஏனெனில் விளக்கம் கொடுப்பது என்றால், அதை மட்டும் தொடர்ந்து செய்ய வேண்டிய நிலைக்கு போய்விடுவோம். அதனால்தான், ஓவியாவை போன்ற நபர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், மற்றவர்களின் கருத்துகளுக்கு விளக்கமளிக்காமல் நம் வாழ்க்கையை சுதந்திரமாக எதிர்கொள்வதுதான்.

எந்த சூழலிலும் மனநிறைவோடு, தன்னம்பிக்கையுடன், மற்றவர்களின் கருத்துக்களால் பாதிக்கப்படாமல் வாழ்வது தான் விடுதலை!