அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா - புஷ்பா -2 
சினிமா

மீண்டும் ஷூட்டிங்கைத் தொடங்கிய ‘புஷ்பா -2’ டீம்… 600 பேரோடு சண்டைபோடும் அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா-2’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.

Aathira

நடிகர் அல்லு அர்ஜூனின் திரைவாழ்வில் ‘புஷ்பா’ திரைப்படம் மறக்க முடியாத வெற்றியைப் பெற்றுத்தந்தது. அகில இந்திய படமாக வெளியான இது 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருதையும் இந்தப் படம் பெற்று தந்து பெருமை சேர்த்தது. 

இதன் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட பிரமாண்டமாக இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என்பதை இதன் ஒவ்வொரு அப்டேட்டும் காட்டுகிறது. 

இந்த வருடம் ஆகஸ்ட் 15 அன்று படம் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால் டிசம்பர் ஆறாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சுகுமார், அல்லு அர்ஜுன்

இதற்கிடையில் அல்லு அர்ஜூன் புஷ்பாவுக்காக வளர்த்த தாடியை ட்ரிம் செய்துவிட்டு சுற்றுலா கிளம்பினார். இதனால், அல்லு அர்ஜூனுக்கும் இயக்குநர் சுகுமாருக்கும் இடையில் கருத்து வேறுபாடு என்றும் இதனால், இந்த வருட இறுதியில் படம் வெளியாவது சந்தேகம்தான், அடுத்த வருட கோடை விடுமுறைக்குதான் வெளியாகும் என செய்திகள் பரவின. 

இதுகுறித்து படக்குழு இப்போது தெளிவுப்படுத்தியுள்ளது. அதாவது, ‘புஷ்பா- 2’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி மாஸான ஆக்‌ஷனுடன் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதோடு, திட்டமிட்டபடி இந்த வருடம் டிசம்பர் 6-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்றும் உறுதிப்படுத்தியிருக்கிறது. 

இன்று தொடங்கியிருக்கும் புஷ்பா -2 ஆக்‌ஷன் சீக்வென்ஸில் 600 பேருக்கும் மேற்பட்ட நடிகர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து 40 நாளுக்கு ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. விரைவில் ராஷ்மிகா மந்தனாவும் ஷூட்டிங்கில் இணைய இருக்கிறாராம்!

இயக்குநர் சுகுமாரும், நடிகர் அல்லு அர்ஜூனும் இணைந்து 'புஷ்பா' மேஜிக்கை மீண்டும் திரையில் நிகழ்த்த இருக்கின்றனர்.