இயக்குநர் தனுஷ் கதையை ரத்தத்தால் எழுதியிருக்கிறேன் என முதல் ஷாட்டிலேயே தெளிவுபடுத்திவிடுகிறார். துஷாரா விஜயன், தனுஷின் தலையில் தண்ணீர் ஊற்ற அது ரத்த ஆறாக மாறி ஓடுகிறது. டிரெய்லரின் இந்தக் காட்சியே படத்துக்கான டோனை செட் செய்துவிடுகிறது.
செல்வராகவன் சின்ன வயது தனுஷிடம் ‘’ராயா காட்டிலேயே ஆபத்தான மிருகம் எது தெரியுமா’’ எனக்கேட்க, தனுஷ் ‘’சிங்கம்தான்'’ எனச்சொல்ல, ‘’காட்லயே ஸ்ட்ரென்த்தான மிருகம் சிங்கம், புலியெல்லாம்தான்… ஆனா, ஆபத்தான மிருகம் ஓநாய்… ஒத்தைக்கு ஒத்த நின்னா சிங்கம் ஓநாயை அடிச்சிடும்… ஆனா, ஓநாய் பயங்கர தந்திரவாதி… கூட்டமா சுத்துப்போட்டு, ஸ்கெட்ச்சுப்போட்டு சிங்கத்தை அடிச்சிடும்’’ எனச்சொல்கிறார். இதன் மூலம், தனுஷின் கதாபாத்திரம், இரட்டை வேஷம் போடும் தந்திரக்காரன் என்பது புரிகிறது. ஓநாய் ஒருமுறை குறிவைத்துவிட்டால் அதன் பார்வையில் இருந்து தப்பிக்கவே முடியாது. அதேப்போல் தனுஷின் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கும் எனத்தெரிகிறது.
படத்தின் மற்ற நடிகர்களான காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் காட்சிகள் இடையிடையே காட்டப்பட, வில்லன் எஸ்.ஜே.சூர்யா தனது வழக்கமான டயலாக் டெலிவரி மூலம் என்ட்ரி கொடுக்கிறார். ‘’அவன் பெரிய ஆம்பள, தைரியசாலின்னா இங்க வந்து போடச்சொல்லு'’ எனச்சொல்ல, செல்வராகவன் ‘’வருவான்… பேய் மாதிரி வருவான்… இறங்கிச் செய்வான்’’ எனச் சொல்கிறார்.
இறுதிக்காட்சியாக போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் முன் கைகட்டி நிற்கும் தனுஷிடம் ‘’ராயா என்ன சொன்ன… டப்புன்னு கேஸை வாபஸ் வாங்கிட்டான்'’ என ரைட்டர் கேட்க ‘’கெஞ்சி கேட்டேன் சார்'’ என தனுஷ் சொல்லும் இடைவெளியில் வெட்டு குத்து சம்பவங்கள் நடக்கின்றன. கடைசியாக ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ‘’உசுரே நீ தானே… நீதானே… நிழலா உன் கூட நானே’’ என்கிற வரிகளுடன் கூடிய பாடல் ட்ரெய்லருக்கு ஒரு உச்சக்கட்ட முடிவைக் கொடுக்கின்றன.
தனுஷ் கதாபாத்திரத்தை ஓநாயுடன் ஒப்பிட்டுச் சொல்லியிருப்பதன் மூலம் தனுஷ் கதாபாத்திரம் பகலில் ஒரு வேஷமும், இரவில் இன்னொரு வேஷமும் போடும் தந்திரக்காரன் என்பது புரிகிறது. தனுஷை மிகவும் பலம் பொருந்தியவனாக, அதேசமயம் பாதிக்கப்பட்டவனாக, தனக்கான நீதியை தானே தேடிக்கொள்ளும் முரடனாக பன்முகத்தன்மை கொண்ட கதபாத்திரமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
ஏ.ஆர். ரஹ்மானின் இசை ட்ரெய்லருக்குப் பெரும் அழுத்தத்தையும், கடைசியில் அவரது குரலில் ஒலிக்கும் ‘’உசுரே நீதானே’’ எனும் வரிகள் எமோஷனையும் கூட்டுகின்றன. ஓம் பிரகாஷின் கேமராவில் ஒரு rawness வெளிப்படுகிறது.
காதல், பழிவாங்கல் மற்றும் மீட்பு எனச் சுற்றிச் சுழலும் கதைக்களம் என்பதை ‘ராயன்' ட்ரெய்லர் சொல்லாமல் சொல்கிறது. மொத்தத்தில், ‘ராயன்’ ட்ரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
தனுஷின் ரசிகர்கள் 26 ஜூலைக்காக நம்பிக்கையோடு காத்திருக்கலாம்!