நடிகர்கள் சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமா ராவ்தான் காரணம் என்றும், ராமா ராவால் நடிகைகள் திருமணம் செய்துகொண்டு சினிமாவைவிட்டே ஓடினார்கள், நடிகர்களை கட்டாயப்படுத்தி போதை பார்ட்டிகளை நடத்தினார் என்றும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேற்று தெலங்கானா பெண் அமைச்சர் கொண்டா சுரேகா பேசினார். இது ஆந்திர சினிமா உலகில் கடுமையான எதிர்வினைகளை கிளப்பியிருக்கிறது.
இந்த பேட்டி வெளியான சில மணி நேரங்களிலேயே நாக சைதன்யாவின் தந்தையும், முன்னணி நடிகருமான நாகார்ஜுனா அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.
‘’கொண்டா சுரேகா அவர்களின் கருத்துகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை உங்கள் எதிரிகளை விமர்சிக்க பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதித்து நடந்துகொள்ளுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் பெண்ணான நீங்கள் எங்கள் குடும்பத்திற்கு கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என பதிவு செய்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சமந்தாவும், நாக சைதன்யாவுமே கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். ‘’பெண்ணாக இருக்க, வெளியே வந்து வேலை செய்ய, கவர்ச்சியான சினிமா துறையில் தாக்குப்பிடித்து வாழ, காதலிக்க & காதலில் இருந்து விலக, இன்னும் எழுந்து நின்று போராட...
நிறைய தைரியமும் வலிமையும் தேவை. அப்படி வலிமையுடன் இந்தப் பயணத்தை மாற்றிக்கொண்டதில் பெருமை அடைகிறேன் கொண்டா சுரேகா அவர்களே. தயவு செய்து என்னை சிறுமைப்படுத்தாதீர்கள். ஒரு அமைச்சராக உங்கள் வார்த்தைகள் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தனிநபர்களின் தனியுரிமைக்கு நீங்கள் பொறுப்புடனும், மரியாதையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றிய ஊகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விஷயங்களைத் தனிப்பட்டதாக வைத்திருப்பதற்கான எங்கள் விருப்பம் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது.
எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடனும் இணக்கமாகவும் இருந்தது. இதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து எனது பெயரை அரசியல் சண்டைகளில் இருந்து விலக்கி வைக்க முடியுமா? நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள். அப்படி இருக்கவே விரும்புகிறேன்'’ என சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருகிறார்.
ஆந்திர பெண் அமைச்சரின் கருத்துகளுக்கு நடிகர்கள் நானி, ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டப் பலரும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள்.