விடாமுயற்சி, அமரன் 
சினிமா

அஜித் குமாரின் 'விடாமுயற்சி'யை கைவிட்ட ரெட் ஜெயன்ட்… தீபாவளிக்கு தனியாக களமிறங்கும் 'அமரன்'!

அஜித்குமார் நடிக்க மகிழ் திருமேனி இயக்கும் படம் 'விடாமுயற்சி'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் இந்த தீபாவாளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 'விடாமுயற்சி' 2025 பொங்கலுக்கு தள்ளிப்போட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

Kavitha

அக்டோபரில் ரஜினிகாந்த், அஜித்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ்சினிமாவின் நான்கு முக்கிய ஹீரோக்களின் படமும் வரிசையாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' மட்டும் தீபாவளி ரேஸில் இருந்து ஒதுங்கியிருக்கிறது. 

தீபாவளி ரிலீஸ் தேதியான அக்டோபர் 31-ம் தேதிக்கு இன்னும் 100 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்' படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் கிட்டத்தட்ட முழுவதுமாக முடிந்து ப்ரமோஷனையும் தொடங்கிவிட்டது ரெட் ஜெயன்ட் நிறுவனம். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம்  தயாரித்திருக்கும் ‘அமரன்' படத்தை மட்டுமல்ல, லைகா தயாரித்திருக்கும் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி' படத்தின் ரிலீஸையும் வாங்கியிருப்பது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான். 

'அமரன்' சிவகார்த்திகேயன்

ஒரே நிறுவனம் தன்னுடைய இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்தால் அது அந்த நிறுவனத்துக்குத்தான் நஷ்டம் என்பதால் சிவகார்த்திகேயனின் ‘அமரன்' படத்தை மட்டும் டிக் அடித்திருக்கிறது ரெட் ஜெயன்ட்.

‘’தீபாவளிக்கு அஜித் படம் வெளிவந்தால்தான் கலெக்‌ஷன் அதிகம் இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்த உண்மை. ஆனால், 'விடாமுயற்சி' படத்தின் வேலைகள் இன்னும் முடியவே இல்லை. மூன்று நாட்களுக்கு முன்னர்தான் படத்தின் ஷூட்டிங்கையே முடித்திருக்கிறார்கள். இப்போதைய சூழலில் ஒரு படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்றால் 100 நாட்களுக்கு முன்பே ப்ரமோஷன் வேலைகளை முழுவதுமாகத் தொடங்கவேண்டும்.

அஜித்குமார், த்ரிஷா 'விடாமுயற்சி'

ஆனால், ‘விடாமுயற்சி' படத்துக்கான முக்கிய வேலைகள் எதுவுமே முடியவில்லை. அதேப்போல் அஜித்தின் அடுத்தப்படமான ‘குட் பேட் அக்லி' படத்தின் முதல் ஷெட்யூல்தான் முடிந்திருக்கிறது. ஆனால், அவர்கள் 2025 பொங்கல் ரிலீஸ் என அறிவித்துவிட்டார்கள். பொங்கலுக்கு அந்தப்படம் தயாராகாது. அதனால் ‘விடாமுயற்சி' படத்தை பொங்கலுக்கும், அதற்கு முன்னதாக டிசம்பர் கமல்ஹாசனின் ‘Thuglife’ படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவெடுத்திருக்கிறோம்'’ என்கிறார் ரெட்ஜெயின்ட் நிறுவனத்துக்கு மிக நெருக்கமானவர்.

இதுதவிர 'அமரன்', 'விடாமுயற்சி' இரண்டு படங்களின் ஓடிடி உரிமத்தையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்தான் வாங்கியிருக்கிறது. அவர்களும் ஒரே நாளில் இரண்டு படத்தையும் வெளியிட விரும்பவில்லை என்கிறார்கள். இதெல்லாம்தான் 'விடாமுயற்சி' பொங்கலுக்குத் தள்ளிப்போகக் காரணம் என சொல்லப்படுகிறது.

அதனால், இந்த 2024 தீபாவளிக்கு தனி ரிலீஸாக களம் காண இருக்கிறது சிவகார்த்திகேயனின் ‘அமரன்’.