நகைச்சுவை நடிகராக இருந்து கதையின் நாயகனாக தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தி வருகிறார் சூரி. சமீபத்தில் வெளியான இவரது 'கருடன்' படமும் கவனம் பெற்றது. 'விடுதலை 2' திரைபடமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த வாரம் 'கொட்டுக்காளி' படமும் 'கூழாங்கல்' இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கதையின் நாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தை அறிவித்து இருக்கிறார் சூரி. 'கருடன்' படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் குமார் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தை ZEE5-ல் 'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.