சூர்யா 
சினிமா

ரஜினிக்கு வழிவிடுவோம், அஜித்துடன் மோதுவோம்... 'கங்குவா' ரிலீஸைத் தள்ளிய சூர்யா!

சூர்யாவின் 'கங்குவா' படத்துடன் ரஜினியின் 'வேட்டையன்' படமும் அக்டோபர் 10 ரிலீஸ் ஆகும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதனால் ரஜினி படத்துடன் நேரடி மோதலைத் தவிர்க்க 'கங்குவா' ரிலீஸ் தள்ளிப்போகும் என அறிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

Prakasam

நடிகர் சூர்யா நடிப்பில் பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருக்கும் படம் 'கங்குவா'. அக்டோபர் 10-ம் தேதி படம் ரிலீஸாகும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரஜினியின் 'வேட்டையன்' பட ரிலீஸால் 'கங்குவா' ரிலீஸ் தள்ளிப்போகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா. 

நடிகரும், சூர்யாவின் சகோதரருமான கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில், ‘96’ படப்புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மெய்யழகன்'. கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா கலந்துகொண்டு பேசினார்.

சூர்யா, கார்த்தி, அரவிந்த்சாமி

‘’தமிழ் சினிமாவின் மூத்தவர், சினிமாவின் அடையாளம் ரஜினி சார். நான் பிறக்கும்போது சினிமாவுக்குள் வந்தவர். 50 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார் என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் தனி ரிலீஸாக வருவதுதான் சரியாக இருக்கும். ரஜினி சார் படத்துக்கு வழிவிடுவோம். ‘கங்குவா’ ஒரு குழந்தை. அந்தக் குழந்தை வர்ற அன்னைக்குத்தான் அதுக்குப்பிறந்தாள். படத்தை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’’ எனப்பேசியிருக்கிறார் சூர்யா.


‘’ ‘கங்குவா’ ஒரு குழந்தை… குழந்தை வர்ற அன்னைக்குத்தான் அதுக்குப்பிறந்த நாள்'’ என சூர்யா சூசகமாகப் பேசியிருப்பதால் நவம்பர் 14-ம் தேதி ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான குழந்தைகள் நாள் அன்று படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி ரிலீஸாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் ‘விடாமுயற்சி' படத்தையும் நவம்பர் 14-ம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்துவருகிறது. இதனால் சூர்யா, அஜித்தோடு நேருக்கு நேர் மோதுவார் எனத் தெரிகிறது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யா, தனது படங்கள் மூலம் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை தர விரும்புகிறவர். தன்னுடைய  'கங்குவா' ரிலீஸ் தேதியை மாற்றி, தமிழ் சினிமாவின் தந்தை என போற்றப்படும் ரஜினிகாந்த் படத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ள சூர்யாவின் இந்த முடிவு அவரது மனப்பக்குவத்தையும், ரஜினியின் மீதான மரியாதையையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், அஜித்தின் ‘விடாமுயற்சி' படத்துடன் நேருக்கு நேர் மோதுவது சூர்யாவின் துணிச்சலையும் காட்டுகிறது.