Alpha, Beta, Delta, Gamma, Omega, Sigma என மொத்தம் ஆறு வகையாக குணாதிசயங்களைப் பட்டியலிட்டு அதற்கு ஏற்றவாரு ஆண்களை ஒவ்வொரு பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள். இப்போதைய சினிமா ஆல்பா ஆண் என்பது பிரபலமாகிவிட்டது. ஆனால், ஆல்பாவைவிடவும் ஆபத்தான ஆண் பிரிவுகள் அதிகம் இருக்கிறது!
6 பேக்ஸ் வைத்துக்கொண்டு ஜிம் பாடியாக இருப்பவர்கள் அல்ல ஆல்பா ஆண்கள். ஒல்லியாகவும், அடித்தால் விழுந்துவிடக்கூடிய ஆளாகவும்கூட பார்ப்பதற்கு இருப்பார்கள். ஆனால், மன உறுதியும் ஆதிக்க மனோபாவமும் இவர்களுக்கு அதிகம் இருக்கும். எதையும் ஒளித்து மறைக்காமல் தவறு செய்தால்கூட வெளிப்படையாகத்தான் செய்வார்கள். அதேப்போல் தாங்கள் இறங்கி வேலை செய்வதைவிட அந்த வேலையை மற்றவர்களுக்கு கட்டளையிட்டு, அதிகாரம் செலுத்தி செய்யவைப்பார்கள். குழுக்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். தாங்கள் என்ன செய்தாலும் அதை நியாயப்படுத்துவார்கள். இவர்களை எல்லோரும் மதிக்கவேண்டும், புகழவேண்டும், உயர்வாக நினைக்கவேண்டும் என விரும்புவர்கள். எல்லாரையுவிட நான் ஒரு படி மேலே என்கிற எண்ணம் அதிகமாக இருக்கும்.
‘பாஷா’ ரஜினிகாந்த்!
மாணிக்கமாக இருந்து பாஷாவாக மாறும் ரஜினிகாந்தின் கேரெக்டரை ஆல்பா ஆணுக்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். சாதாரண ஆட்டோ டிரைவராக இருந்தவர் ஆன்டனியால் தூண்டப்பட்ட பின்னர் பாஷாவாக மாறும் தருணமும், அதன்பிறகான அவரது ஆதிக்கமும், அலப்பறையும் சிறந்த உதாரணம்!
பீட்டா ஆண்கள் பொதுவாக எல்லோருக்கும் ஆதரவாகவும், எல்லாவற்றுக்கும் ஒத்துழைப்பவர்களாகவும், அனுதாபம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். நம்பகமான ஆண்களாக இருப்பார்கள். பெரிதாக யாரையும் பகைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். எல்லோருடனும் ஒத்துப்போவார்கள். மற்றவர்களை மதிப்பார்கள் எல்லோருடனும் இணைந்து செயல்பட விரும்புவார்கள். எல்லாவற்றிலும் நேர்மையை, நேர்வழியை கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள்.
‘அலைபாயுதே’ மாதவன்
‘அலைபாயுதே’ படத்தில் கார்த்திக்காக நடித்த மாதவனின் கேரெக்டரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கார்த்திக் பீட்டா ஆண். சக்தியின் மீதான் அன்பும், மரியாதையும், அவளுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்கிற எண்ணமும் கொண்டவன். கார்த்திக்கின் கதாபாத்திரம் விசுவாசம் மற்றும் உணர்ச்சிகளால் ததும்பும் கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
டெல்டா ஆண்
டெல்டா ஆண் என்பவன் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவன். எந்த வம்பு, தும்புக்கும் போகாதவன். கடின உழைப்பாளி. இந்த வகை ஆண்கள் தலைமை குணத்தையோ, மேலாதிக்கத்தையே விரும்பமாட்டார்கள். ஆனால் இவர்கள் ஒரு டீமில் இருந்தால்தான் அந்த டீம் வெற்றிபெறமுடியும் என்கிறபடியான ஆண்களாக இருப்பார்கள். ஆனால், இந்தக் குழுவில் தான் தான் முக்கியமானவன் என்பதை வெளியில் காட்டிக்கொள்ளாதவர்களாக இருப்பார்கள். தாங்கள் ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதை சரியாகச் செய்து முடிக்கும்வரை ஓய்வெடுக்கமாட்டார்கள்.
‘சின்ன கவுண்டர்’ விஜயகாந்த்!
ஊர் பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் உண்மையாகவும், நேர்மையாகவும் அந்த ஊருக்கு உழைப்பவராகவும் இருப்பார். இந்தக் கதாபாத்திரம் கடினமாக உழைக்கக்கூடியவராக நேர்வழியில் செயல்படுபவராக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
காமா ஆண்கள் அறிவாளிகள், லட்சியவாதிகள். எந்நேரமும் பெரிய கனவுகளோடு இருப்பார்கள். இவர்கள் தங்கள் நலன்களில் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களுக்குப் பிடித்ததை தாங்கள் விரும்புவதை மட்டுமே பேரார்வத்தோடு செய்வார்கள். பெரும்பாலும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். இவர்களின் இன்ஸ்டிங்க்ட், பேஷன் படிதான் செயல்படுவார்கள். இவர்களும் கடின உழைப்பாளிகளே!
‘வேட்டையாடு விளையாடு’ கமல்ஹாசன்!
‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ராகவனாக நடித்திருந்த கமல்ஹாசன் கேரெக்டரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உண்மை மற்றும் நீதிக்காக லட்சியத்தோடு போராடும் கதாபாத்திரமாக இது இருக்கும்.
தனிமை விரும்பிகள். சுதந்திரமாக தன்போக்கில் வாழ விரும்புபவர்கள். ஆணுக்கு என வகுக்கப்பட்டிருக்கும் சமூகப்படிநிலைகளை விரும்பாத, யாரையும் சார்ந்திருக்காத, தனக்குப்பிடித்தை மட்டுமே செய்யும் குணாதிசயம் கொண்ட ஆண்களே ஒமேகா ஆண்கள். தனிமையில் சுகம் காண விரும்புபவர்கள். யாரையும் சார்ந்திப்பதை விரும்பமாட்டார்கள்.
'ஆடுகளம்' தனுஷ்
‘ஆடுகளம்’ படத்தில் கே.பி. கருப்புவாக நடித்திருந்த தனுஷின் கதாபாத்திரம் இதற்கு ஒரு உதாரணம். கருப்பு சமூகத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு சேவல் சண்டைக்காரன். அவனுக்கு அதைத்தாண்டி வாழ்க்கையில் எந்த லட்சியங்களும் இல்லை. அதிலேயே தன்னிறைவு பெற்றவன் சுதந்திரமானவன். இந்த சமூகம் சொல்லித்தரும் எந்த விஷயத்திலும் பெரிதாக ஆர்வம் காட்டமாட்டான், எல்லாவற்றையும் புறக்கணிப்பான்.
கூட்டத்தில் இருந்து விலகி இருக்க நினைப்பவன் இந்த சிக்மா ஆண். எல்லோரும் ஓர் திசையில் போனால் அதற்கு எதிர் திசையில் காரண, காரியங்களோடு பயணிப்பான். முதலில் இவர்களைப் பார்த்தால் காமெடியன் எனத்தோன்றும். ஆனால், தங்கள் பாதையில் மிகுந்த கவனத்தோடு இருப்பார்கள். செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருப்பார்கள். பெரும்பாலும் தனிமை அல்லது சிறிய கூட்டத்தை விரும்புவார்கள். அதேசமயம் வெளிப்படையாக இருக்கமாட்டார்கள். எதோ மர்மத்துடனேயே சுற்றுவார்கள். தங்களுக்கென சில லட்சியங்களை வைத்துக்கொண்டு அதை மட்டுமே நோக்கி ஓடுவார்கள்.
‘சூது கவ்வும்’ விஜய் சேதுபதி!
சூது கவ்வும் படத்தில் சேதுவாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். காமெடியனாக அதே சமயம் ஒரு மர்மத்துடனே உலவிக்கொண்டு தன்னுடைய காரியத்தில் தெளிவாக இருக்கும்.