தமிழ் சினிமா நடிகர்கள் Image created by AI
சினிமா

அரைசதத்தில் 'மகாராஜா' ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி… தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்களின் 50-வது படங்கள் ஹிட்டா, ஃப்ளாப்பா?

மைல்ஸ்டோன் படங்கள் என சொல்லப்படும் 100வது படம் ஹிட் ஆகாது என்பதற்கு கோலிவுட்டில் அதிக உதாரணங்கள் உண்டு. எம்ஜிஆர்,சிவாஜி, ரஜினி, கமல் என எல்லோருக்குமே 100-வது படங்கள் ஹிட் படங்களாக அமையவில்லை.

Puviyarasan Perumal

100-வது படங்களுக்கு வெற்றி ராசி இல்லை என்றாலும் 50-வது படங்கள் சில ஹீரோக்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளையும், சிலருக்கு பெரிய தோல்விகளையும் கொடுத்திருக்கிறது. விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் விஜே-வுக்கு பெரிய ஹிட் படமாக மாறியிருக்கிறது.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் 50-வது படங்கள் என்ன, அதன் பர்ஃபாமென்ஸ் எப்படி எனப்பார்ப்போம்!

எம்ஜிஆர் : தாய் சொல்லை தட்டாதே

இயக்குநர் : திருமுகம்

ஆரூர்தாஸ் எழுதி திருமுகம் இயக்கிய படம் தாய் சொல்லை தட்டாதே. 1961-ல் வெளியான இந்தப்படம்தான் எம்ஜிஆரின் 50-வது படம். சரோஜாதேவி ஹீரோயினாக நடித்த இந்தப்படம் எம்ஜிஆருக்கு ஹிட் படமாகவே அமைந்தது. 100 நாட்களுக்கு மேல் ஓடியது. 

சிவாஜி : சபாஷ் மீனா

இயக்குநர் : பி.ஆர்.பந்துலு

சிவாஜியின் 50வது படத்திலும் ஹீரோயின் சரோஜாதேவிதான்.  1958-ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் சிவாஜிக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோபோல நடித்திருந்தவர் சந்திரபாபு. இவருக்கு சிவாஜியைவிட இந்தப்படத்தில் அதிக சம்பளம் என சொல்லப்பட்டது. படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 

ரஜினி - நான் வாழவைப்பேன்

இயக்குநர் - யோகானந்த்


‘நான் வாழவைப்பேன்' என்கிற டைட்டில் மூலம் 50-வது படத்தில் தமிழ்த்திரையுலகுக்கு மெசேஜ் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால், இந்தப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோ இல்லை என்பதுதான் ட்விஸ்ட். சிவாஜி கணேசன்தான் இந்தப்படத்தின் ஹீரோ. 1979-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘மஜ்பூர்' படத்தின் ரீமேக்தான் இது. பெரிய ஹிட் இல்லை என்றாலும் தோல்விப்படமாக இது அமையவில்லை.

'நான் வாழவைப்பேன்' படத்தில் சிவாஜி, ரஜினி

கமல்ஹாசன் - மூன்று முடிச்சு

இயக்குநர் - கே.பாலசந்தர்

1976-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘மூன்று முடிச்சு’ படம்தான் கமல்ஹாசனின் 50-வது படம். டீன்ஏஜ் ஶ்ரீதேவி இதில் ஹீரோயினாக நடிக்க, ரஜினிகாந்த் இந்தப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ‘ஓ சீத கதா’ படத்தின் ரீமேக்தான் மூன்று முடிச்சு. ரஜினிகாந்துக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு அடையாளம் கொடுத்த இந்தப்படம் பெரிய ஹிட் படமாக அமையவில்லை.

விஜயகாந்த் - ஈட்டி 

இயக்குநர் - ராஜசேகர்

1986-ம் ஆண்டு வெளியான ஈட்டி திரைப்படம் விஜயகாந்த்தின் 50-வது படம். இதில் ஹீரோயின்களாக நளினி, விஜி நடித்திருக்க, ராஜசேகர் இந்தப்படத்தை இயக்கினார். விஜயகாந்த்துக்கு ‘ஈட்டி' வெற்றிப்படமாக அமையவில்லை. 

ஶ்ரீதேவி, கமல்ஹாசன்

விஜய் - சுறா

இயக்குநர் - எஸ்.பி.ராஜ்குமார்

விஜய் தமிழ் சினிமாவின் அறிமுகநாயகனாக இருந்தபோது நடித்த ஒன்ஸ்மோர் படத்தின் வசனகர்த்தா எஸ்.பி.ராஜ்குமார். என் புருஷன் குழந்தை மாதிரி, பொன்மனம், கார்மேகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமாருக்கு தன்னுடைய 50வது படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் விஜய். ‘சுறா’ மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்ததோடு விஜய் ஹேட்டர்ஸுக்கு ட்ரோல் மெட்டீரியலாகவும் அமைந்தது. 

மங்காத்தா - அஜித்

இயக்குநர் - வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ படம்தான் அஜித்தின் 50-வது படம். அஜித்துக்கு கம்பேக் கொடுத்த படம் என்பதோடு அஜித்தை இன்னொரு பரிமாணத்தில் காட்டிய படம். 

அஜித்

ஐ - விக்ரம்

இயக்குநர் - ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ‘அந்நியன்' பாணியில் படம் அதிரடி ஹிட்டாகும் என எல்லோரும் நினைக்க, படம் ஃப்ளாப் ஆனது.

நடிகர் சூர்யா இன்னும் 50 படங்கள் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.