மோலிவுட் Vs கோலிவுட் 
சினிமா

புதுமைப்பித்தனின் தோல்வியும், ஜெயகாந்தனின் முதல் தமிழ் நியோ ரியலிச சினிமாவும்! சுரேஷ் கண்ணன் - 5

பொதுமக்களிடம் பரவலாக இந்தப் படம் சென்று சேர வேண்டும் என்று விரும்பிய காமராஜர், படத்தை இலவசமாக திரையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சோவியத் யூனியனில் திரையிடப்பட்ட ‘உன்னைப் போல் ஒருவன்’ சர்வதேச அரங்குகளிலும் பாராட்டைப் பெற்றது.

Suresh Kannan

இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் மலையாள சினிமா சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு தமிழ் சினிமா பயன்படுத்தவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. பொதுவாக  தமிழில் நல்ல சினிமாக்கள் வருவது குறைவாக இருப்பதற்கு இதையொரு காரணமாக சொல்லலாம். மலையாளத்தில் எழுத்தாளர்களே திரைக்கதையாசிரியர்களாகவும் இயக்குநர்களாகவும் மாறியதால் சிறந்த சினிமாக்கள் அங்கு வெளிவந்தன. தமிழில் அதற்கான உதாரணங்கள் மிக குறைவு. அந்த எழுத்தாளர்களாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. 

தமிழ் நவீன இலக்கியத்தின் முக்கியமான ஆளுமையான புதுமைப்பித்தன் தமிழ் சினிமாவில் பணியாற்றச் சென்றார். தினமணி பத்திரிகையில் அவருடன் பணிபுரிந்து கொண்டிருந்த சில எழுத்தாளர்கள் சினிமாவில் எழுதி புகழ் பெறத் துவங்கினார்கள். தணிகாசலம் என்கிற இயற்பெயரைக் கொண்டிருந்த எழுத்தாளர், ‘இளங்கோவன்’ என்கிற புனைப்பெயரில் பிரபலமான வசனகர்த்தாவாக ஆனார். மணிக்கொடி ஆசிரியர், பி.எஸ்.ராமையா சினிமா இயக்குநராக ஆனார். 

தமிழ் சினிமாவில் போராடிய எழுத்தாளர்கள்

பத்திரிகைத் துறையில் சொற்பமான சம்பளத்திற்கு பணியாற்றிக் கொண்டு வறுமையில் வாடிக் கொண்டிருந்த புதுமைப்பித்தனுக்கும் சினிமா ஆசை பற்றிக் கொண்டது. ‘காமவல்லி’ என்கிற திரைப்படத்திற்கு வசனம் எழுதியதில் கணிசமான பணம்  கிடைத்தது. ‘அவ்வையார்’ என்கிற படத்திற்கு வசனம் எழுதினாலும் பின்னர் அது இடம்பெறவில்லை. இதற்கிடையில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கிய புதுமைப்பித்தன் ‘வசந்தவல்லி’ என்கிற தலைப்பில் குற்றாலக் குறவஞ்சி கதையை படமாக்க திட்டமிட்டார். ஆனால் அது ஆரம்ப ஏற்பாடுகளுடன் அப்படியே நின்று போயிற்று. 

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறைக்குச் சென்றிருந்த தியாகராஜ பாகவதர், சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்திருந்த சமயம் அது. அதுவரை பாகவதரின் படங்களில் வசனம் எழுதிக் கொண்டிருந்த இளங்கோவனுடன், பாகவதருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வேறு வசனகர்த்தாவை பயன்படுத்தத் திட்டமிட்டார். அந்த வகையில் புதுமைப்பித்தனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘ராஜமுக்தி’ என்கிற அந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, காசநோய் முற்றியதின் காரணமாக புதுமைப்பித்தனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. படம் வெளியாவதற்கு முன்பே அவரது மறைவு நிகழ்ந்து விட்டது. 

ஆக... தனது வறுமை காரணமாக, தமிழ் சினிமாவை புதுமைப்பித்தன் பயன்படுத்திக் கொண்டாரே ஒழிய, அவரது எழுத்துத் திறனை தமிழ் சினிமா பயன்படுத்தவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளரான புதுமைப்பித்தனுக்கே இதுதான் நிலைமை. இதுதான் தமிழ் இலக்கியத்தின் சூழலும் கூட.

அதன் பிறகு அகிலன் முதற்கொண்டு எத்தனையோ எழுத்தாளர்கள், தமிழ் சினிமாவில் பணியாற்றச் சென்றிருக்கிறார்கள். இன்னமும் சென்று கொண்டிருக்கிறார்கள். சினிமாவிற்கு ஏற்ப அவர்கள் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்ததே தவிர, சினிமாவை அவர்களால் பெரிதும் மாற்ற இயலவில்லை என்பதுதான் யதார்த்தம். சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுக்கும் இதுதான் நிலைமை. 

புதுமைப்பித்தன்


இலக்கியத்தின் மதிப்பு அறியாத இயக்குநர்கள்

சினிமா என்பது அடிப்படையில் வணிக லாபத்தை நோக்கமாகக் கொண்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சில கோடிகளை முதலீடாக இட்டு பல கோடிகளை திரும்ப அள்ளியெடுக்க முயலும் பேராசை நிறைந்த உலகமாக அது இருக்கிறது. எனவே ‘கமர்சியல்’ தனம் பெருகி வழியும் சினிமாக்களை மட்டுமே அங்கு எதிர்பார்க்க முடியும். அசலான இலக்கிய கதை என்பதற்கோ, நல்ல எழுத்தாளர் என்பதற்கோ அங்கு பெரிய மதிப்பில்லை. ‘சீன்’ பிடிக்கத் தெரிந்தவனே அங்கு சூப்பர் எழுத்தாளன். ஒருவகையில் இதுதான் யதார்த்தம். 

இதற்குக் காரணம், அரிதான சில விதிவிலக்குகளைத் தாண்டி பெரும்பாலான இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இலக்கிய வாசிப்பு கிடையாது. சிறந்த எழுத்தாளர்களையோ, அந்த எழுத்தின் மகத்துவத்தையோ அறிந்திருக்க மாட்டார்கள். ஒருவேளை சிலர் சற்று அறிந்திருந்தாலும் கூட ‘இதெல்லாம் சினிமாவிற்கு செட் ஆகாது’ என்று அவர்களே மறுத்து விடுவார்கள். மகேந்திரன் போன்ற இலக்கியத்தின் மதிப்பு தெரிந்த இயக்குநர்களால் மட்டுமே சில நல்ல சினிமாக்கள் இங்கு சாத்தியமாகின. 

இத்தகைய போக்கிற்கு இயக்குநர்களை மட்டுமே குறை சொல்லி விட முடியாது. வணிக சினிமாவிற்கு அடிமையாகி, நட்சத்திர நடிகர்களின் அலப்பறைகளுக்கு பக்தர்களாகியிருக்கும் ரசிகர்களும் இதற்கு முக்கியமான காரணம். ஒரு சராசரி ரசிகன் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பது பொழுதுபோக்கு மட்டுமே. கமர்சியல்தன்மை நிரம்பி வழிந்து,  திகட்டத் திகட்ட எண்டர்டெயின்மென்ட் இருந்தால் அவன் குஷியாகி விடுவான். கூட்டம் கூட்டமாகச் சென்று தயாரிப்பாளர்களின் கல்லாவை வழிய வழிய நிரப்புவான். இதற்கு மாறாக, சிறிய மாற்று முயற்சியாக ஒரு நல்ல சினிமா வந்தால் அதை இரக்கமே இல்லாமல் புறக்கணித்து விடுவான். மட்டுமல்லாமல், ‘’செம போரு.. யார் அதையெல்லாம் பார்ப்பா?” என்று கூடுதலாக எள்ளி நகையாடவும் செய்வான். இப்படியொரு சூழலில் மாற்றுத் திரைப்படங்களை தயாரிக்க எவர் முன்வருவார்கள்?


‘அறிதலுக்காக அல்ல, சம்பாதிக்கவே கல்வி’

சமூகத்தின் இத்தகைய போக்கிற்கும் வணிக நோக்குச் சூழல்தான் காரணம். ‘அறிதலுக்காக  அல்ல,  சம்பாதிப்பதற்காகத்தான் கல்வி’ என்கிற விஷயம் நம் சமூகத்தின் ஆழ்மனதில் அழுத்தமாக ஆணியடிக்கப்பட்டிருக்கிறது. எந்தப் படிப்பு படித்தால் நன்றாக பணம் சம்பாதிக்க முடியும் என்கிற எண்ணம், பிள்ளைகளின் மனதில் ஆழமாக பெற்றோர்களால் விதைக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் இலக்கியமாவது, மண்ணாவது?! அப்படியே துணைப்பாடத்தில் இலக்கியம் தொடர்பான சமாச்சாரங்கள் வந்தாலும் அது பத்து மார்க் கேள்வி என்கிற அலட்சிய மனோபாவமே மாணவச்சமூகத்திடம் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியமும் நவீன இலக்கியமும்தான் ஒரு தமிழனின் பெரும்சொத்து என்கிற பிரக்ஞையோ மனமுதிர்ச்சியோ தமிழ் சமூகத்தில் இல்லை. இதுதான் பொதுவான நிலைமை. 

இதற்கு மாறாக மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் இலக்கியச் செழுமையின் பின்னணி அழுத்தமாக இருக்கிறது. சிறந்த எழுத்தாளர்கள் கணிசமாக இருப்பதைப் போலவே சிறந்த வாசகர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எனவே இலக்கிய ருசியை அடிப்படையாகக் கொண்ட வாசகன், அதையொட்டி ஒரு நல்ல சினிமா வரும் போது ஆதரிக்கத் தவற மாட்டான். இப்படியான ரசிகர்களின் ஆதரவினால் நல்ல சினிமாக்களின் வருகை அங்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதுதான் மலையாள சினிமா மற்றும் தமிழ் சினிமாவின் சூழலுக்கு இடையில் உள்ள அடிப்படையான வித்தியாசம். 

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களால் பெரிய அளவிலான பாதிப்பு எதையும் ஏற்படுத்த முடியவில்லை என்று பார்த்தோம், அல்லவா? அனைத்திற்கும் ஒரு விதிவிலக்கு இருப்பதைப் போலவே இதற்கும் ஒன்று இருந்தது. அது  எழுத்தாளர் ஜெயகாந்தன். தமிழ் சினிமாவில் நிறைந்திருக்கும் அசட்டுத்தனங்கள் குறித்து எரிச்சலும் அதிருப்தியும் கொண்டிருந்தார் ஜெயகாந்தன். அது பற்றி காட்டமாக பல விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார். வெறும் பேச்சோடு நின்று விடாமல் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பி களத்திலும் இறங்கிய அரிய முன்னோடியாக ஜெயகாந்தன் இருந்தார். 

களத்தில் இறங்கி சாதித்த ஜெயகாந்தன்

ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்த நாவல் ‘உன்னைப் போல் ஒருவன்’. இதை சினிமாவாக எடுக்கலாம் என்று ஜெயகாந்தனின் இடதுசாரி தோழர்கள் உற்சாகமூட்டினார்கள். வீனஸ் கிருஷ்ணமூர்த்தி என்கிற சினிமா தயாரிப்பாளர், ஜெயகாந்தனின் தீவிர வாசகர். ‘’உங்களது படைப்புகளில் ஒன்றை சினிமாவாக தயாரிக்க வேண்டும் என்பது என் விருப்பம்’’ என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனவே இந்த நாவலைக் கொண்டு போய் தயாரிப்பாளரிடம் தந்தார் ஜெயகாந்தன்.

தயாரிப்பாளர் காட்டிய ஆர்வம் காரணமாக, பத்தே நாட்களில் ‘உன்னைப் போல் ஒருவன்’ நாவலுக்கு திரைக்கதையை எழுதி முடித்தார். அதை வாசித்த தயாரிப்பாளர், “என்னதிது.. வங்காளப்படம் மாதிரி இருக்கிறது.. பொழுதுபோக்கு அம்சங்கள் கொஞ்சம் கூட இல்லையே?” என்று சொன்ன கமென்ட், ஜெயகாந்தனையும் அவரது தோழர்களையும் சினமூட்டியது. ‘’இந்த சினிமாவை நாமே தயாரிப்போம்’’ என்கிற உறுதியுடன் களத்தில் இறங்கினார்கள். எப்படியோ முட்டி மோதி பணத்தைத் திரட்டி மிகக் குறைவான பட்ஜெட்டிற்குள் படத்தை எடுத்து முடித்தார்கள். 

ஜெயகாந்தன்

படம் வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்களின் போதுமான வரவேற்பு இல்லாமல் முடங்கியது. வணிகரீதியான தோல்வியைச் சந்தித்தாலும் விமர்சன ரீதியான வரவேற்பு கணிசமாக கிடைத்தது. ‘தமிழின் முதல் நியோ ரியலிஸ திரைப்படம்’ என்கிற பாராட்டும் அங்கீகாரமும் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்திற்கு தேடி வந்தது. சிறந்த திரைப்படமாக தேசிய அளவில் மூன்றாம் இடத்திற்கான விருதையும் பெற்றது. (முதல் இடத்தைப் பெற்ற படம் சத்யஜித்ரேவின் ‘சாருலதா’).

பொதுமக்களிடம் பரவலாக இந்தப் படம் சென்று சேர வேண்டும் என்று விரும்பிய காமராஜர், படத்தை இலவசமாக திரையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சோவியத் யூனியனில் திரையிடப்பட்ட ‘உன்னைப் போல் ஒருவன்’ சர்வதேச அரங்குகளிலும் பாராட்டைப் பெற்றது. தமிழின் முதல் ‘நியோ ரியலிஸ’ திரைப்படத்தை அதன் பிறகும் சினிமா ரசிகர்களால் காண முடியவில்லை. இதன் பிரதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை. எனினும் 2023-ம் ஆண்டு, ஜெயகாந்தனின் பிறந்தநாளையொட்டி அவரது குடும்பத்தார், ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார்கள். 

‘நல்ல சினிமா தமிழில் வரவேண்டும்’ என்று மனதார விரும்பிய ஓர் எழுத்தாளனுக்கு சமூகம் திருப்பித் தந்த பரிசு இதுதான். ஏறத்தாழ இதே சூழலே இப்போதும் நிகழும் போது எப்படி தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வெளியாகும்?! 

தொடர்ந்து பேசுவோம்…