வன்னியரசு, தொல்.திருமாவளவன், மாரி செல்வராஜ் பெற்றோர் 
சினிமா

’வாழை’ படத்தை பார்த்து கண் கலங்கிய திருமாவளவன்... மாரி செல்வராஜின் வீட்டுக்கேச் சென்று பாராட்டு!

தமிழ் சினிமாவின் உணர்வுப்பூர்வமான இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், தனது நான்காவது படமான ‘வாழை’ மூலம் மீண்டும் சமூகத்தில் ஒரு உரையாடலை தொடங்கிவைத்திருக்கிறார். படத்தைப் பார்த்து கண்கலங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேராக மாரி செல்வராஜின் வீட்டுக்கேச் சென்றிருக்கிறார்!

Aathira

இயக்குநர் மாரி செல்வராஜ், தனது வாழ்வில் அனுபவித்த வேதனைகளை, சோதனைகளை மற்றும் சமூகத்தில் நிலவிய அநீதிகளை தனது திரைப்படங்களின் வழியே உணர்ச்சிபூர்வமாகப் படம் பிடித்துவந்துள்ளார். அவரது நான்காவது படமான 'வாழை', கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம், மாரி செல்வராஜின் சிறுவயதில் அவரின் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு முக்கியமான சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

'வாழை' படத்தின் மையக்கருத்தும், திரைக்கதையும், ரசிகர்களின் இதயத்தை வருடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த பல பிரபலங்கள், அதன் ஆழமான அர்த்தத்தை உணர்ந்து, இயக்குநரின் திறமையைப் பாராட்டி, உணர்ச்சிபூர்வமாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இயக்குநர் பாலா, நடிகர் சூரி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நேரில் சென்று, மாரி செல்வராஜின்அனுபவத்தைப் புரிந்துகொண்டு, அவரை ஆரத் தழுவிக் கொண்டனர்.


இச்சூழலில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும், 'வாழை' படத்தை திரையரங்கில் பார்த்த உணர்ச்சிப்பெருக்கில், உடனடியாக மாரி செல்வராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை பாராட்டியுள்ளார். திருமாவளவன், மாரி செல்வராஜின் பெற்றோர், மனைவி, மற்றும் குடும்பத்தினரை சந்தித்து, அவர்களை வாழ்த்தினார்.

மாரி செல்வராஜ், திருமாவளவனின் அன்பு, ஆதரவு, மற்றும் அவரின் நேர்மையான பாராட்டுக்கு தனது நன்றியையும், நெகிழ்ச்சியையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். '' 'வாழை' திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கே நேரில் வந்து வாழ்த்தி இதயத்தை இறுகபற்றிக்கொண்ட அன்பு அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் '' எனக் குறிப்பிட்டுள்ளார் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜ் குடும்பத்தினருடன் தொல்.திருமாவளவன்

மாரி செல்வராஜின் ’வாழை’ திரைப்படம், தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தைப் பெற்றது மட்டுமின்றி, சமூகத்தின் அடிப்படையான பிரச்சனைகளை பேசுபொருளாக்கியிருக்கிறது. சமூகத்தில் நிலவும் அநீதிகளை அம்பலப்படுத்தும் மாரி செல்வராஜின் கதை சொல்லல், தமிழ் சினிமா உலகில் அவரது முத்திரையைப் பதிவு செய்துள்ளது. திருமாவளவனின் நேரடிப் பாராட்டு, இந்தப் படத்திற்கு மேலும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளதோடு, சமூகத்தின் மனசாட்சியையும் தட்டி எழுப்பியுள்ளது.