விமானப்படை தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினர் வானில் விமான சாகச நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிகளை மெரினா கடற்கரையில் நடத்திக் காட்டினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடையுடன் லட்சக்கணக்கான மக்கள் இந்த சாகச நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் நிகழ்வை பார்த்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதோடு வெயிலின் தாக்கம் காரணமாக பல பேர் மயங்கி விழுந்திருப்பதும் 5 பேர் பலியாகி இருப்பதும் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதுபற்றி தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ''சென்னையில் இந்திய விமானப் படை சார்பில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’' எனப் பதிவு செய்துள்ளார்.