நடிகை சாவித்ரியின் பயோபிக் படமான ‘நடிகையர் திலகம்' படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கியிருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படம்தான் Kalki 2898 AD. விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி இந்த உலகத்துக்குள் உருவெடுத்து வரத்துடிக்கும் மகாபாரதக் கதையை பின்னணியாக வைத்துக்கொண்டு அதை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாக்க முயன்றிருக்கிறார் நாக் அஷ்வின்.
கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், தியா பட்டானி, ஷோபனா, பசுபதி எனப்பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ‘நடிகையர் திலகம்' படத்தை தயாரித்த அதே வைஜெயந்தி மூவிஸ் தயாரித்திருக்கிறது. நேற்று வெளியான 10 மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் இருக்கிறது Kalki 2898 AD படத்தின் ட்ரெய்லர்.
ட்ரெய்லரில் என்ன ஸ்பெஷல்?!
3 நிமிடங்களுக்கு வெளியாகியிருக்கும் Kalki 2898 AD ட்ரெய்லர் ஒரு சிதைக்கப்பட்ட, சீர்குலைந்த ஒரு டிஸ்டோப்பியா நிலப்பரப்பைக் காட்டுவதுடன் தொடங்குகிறது. டிஸ்டோப்பியா உலகம் என்றால் உடைந்த, சிதைந்த, ஒடுக்கப்பட்ட அல்லது பயமுறத்தப்பட்ட நிலையில் இருக்கும் சமூகத்தை குறிக்கும் வார்த்தையாகும்.
கதாசிரியரின் குரல் இந்த உலகத்தின் முதல் நகரம் எனச்சொல்ல, அடுத்துவரும் சிறுவனின் குரல் இந்த உலகத்தின் கடைசி நகரம் காசி என்று விவரிப்பதோடு ட்ரெய்லரின் முதல் வசனம் தொடங்குகிறது.
விஷ்ணுவின் அவதாரமான கல்கியை கருவில் சுமக்கும் தீபிகாவை அழிக்க நினைக்கிறது வில்லன் குழு. காரணம், அவர்கள் ‘’கடவுள் ஒருவர்தான். அவர் சுப்ரீம் யாஸ்கின்'’ என முழங்குகிறார்கள். அமிதாப்பச்சனிடம் சிறுவன் ‘’நீங்க கூடயிருந்தீங்கன்னா எத்தனையோ பேரைக்காப்பாத்தலாம்’’ எனச்சொல்ல, ‘’நான் காக்க வேண்டியது ஒருவனை மட்டும்தான் எனச்சொல்கிறார்’’ அமிதாப் பச்சன். அந்த ஒருவன் தீபிகாவின் வயிற்றுக்குள் இருக்கும் கருதான்.
6000 வருஷங்களுக்கு முன்னால் மின்னிய ஒளி திரும்பவரப்போகுது என பதட்டத்துக்கு உள்ளாகும் வில்லன்கள் பைரவன் எனும் பிரபாஸை டிஸ்டோபியன் உலகுக்குள் புஜ்ஜி காரில் அனுப்பிவைக்கிறார்கள். பணத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்யும் பிரபாஸ் தீபிகா படுகோனைவைத் தூக்கிவரப்போக, அவர் அவதாரத்தை அழித்தாரா, காத்தாரா என்பதுதான் கதை என்பதை சொல்கிறது Kalki 2898 AD ட்ரெய்லர்.
இந்த ட்ரெய்லரில் ஒரு சில விநாடிகள் மட்டுமே கமல்ஹாசனின் வயதான தாத்தா முகம் காட்டப்படுகிறது. ‘’பயப்படாதே… புதுப்பிரபஞ்சம் வந்துகிட்டு இருக்கு'’ எனத் தீபிகாவின் காதுகளில் கிசுகிசுக்கும் கமல்ஹாசனின் கதாபாத்திரம் வில்லனா, ஹீரோவா என்பது மட்டும் ட்ரெய்லரிலும் கிசுகிசுப்பாகவே இருக்கிறது. ஆனால், தமிழ் சினிமாவின் தீர்க்கதரிசியான கமல்ஹாசன் Kalki 2898 AD படத்திலும் தீர்க்கதரிசியாகவே நடித்திருக்கிறார் என்பது புரிகிறது.
பிரமிக்க வைக்கும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அதீத தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் செட் மூலம் ஒரு ஹாலிவுட் படம்போன்ற தோற்றத்தைத் தருகிறது Kalki 2898 AD. சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையில் ஒருவித இரைச்சல் இருந்தாலும் படத்தின் விஷுவல் பிரமாண்டத்துக்கு இது வலுசேர்க்கவே செய்கிறது.
செர்பியாவைச் சேர்ந்த கிராஃபிக்ஸ் வல்லுநரான Djordje Stojiljkovic படத்துக்கான ஒளிப்பதிவை செய்திருக்கிறார். கிராஃபிக்ஸும், சினிமாட்டோகிராஃபியும் அதீதமாக இணைந்திருப்பதால் எது கிராஃபிக்ஸ், எது ஒரிஜினல் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு டெக்னிக்கலாக மிரட்டியிருக்கிறார்கள்.
ட்ரெய்லர் மிரட்டலாக இருந்தாலும் புராணக் கதையில் சயின்ஸ் ஃபிக்ஷனைப் புகுத்துவது என்பது ஆபத்தானது. அதோடு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸோடு சேர்ந்த கதை சொல்லலின் சமநிலை படத்தில் இருக்கவேண்டியது முக்கியம். கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல புராணக்கதை லாஜிக் இல்லாமல் சயின்ஸ் ஃபிக்ஷனோடு ஒன்றினால் பார்வையாளர்கள் படத்தை தூக்கியெறியும் ரிஸ்க் அதிகமாகவே இருக்கிறது.
சவாலை சமாளிக்குமா Kalki 2898 AD என்பது வரும் ஜூன் 27-ம் தேதி தெரிந்துவிடும். உலகம் முழுக்க தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது ‘கல்கி 2898 கிபி’.