50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரக வலம்வந்த டெல்லி கணேஷ் நேற்றிரவு சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 81.
ஆகஸ்ட் 1, 1944-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர் கணேஷ். கே.பாலசந்தர் இயக்கத்தில் அறிமுகமான இவருக்கு தொடர்ந்து தன் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை வழங்கிவந்தவர் கமல்ஹாசன்.
‘நாயகன்’ படத்தில் கமல்ஹாசனுடையே பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த டெல்லி கணேஷுக்கு, கமல்ஹாசன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருந்தார். அதிலும் மிரட்டிய டெல்லி கணேஷுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. ‘மைக்கேல் மதன கமாராஜன்’ தொடங்கி, ‘அவ்வை சண்முகி’, ‘தெனாலி’ தற்போது வெளிவந்த ‘இந்தியன் -2’ படம் வரை தொடந்து கமல்ஹாசனுடன் நடித்துவந்தார் டெல்லி கணேஷ்.
சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் தொடர்ந்து நடித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘மாரி’ சீரியலில் கடைசியாக நடித்தார் டெல்லி கணேஷ். இதுதவிர வெப்சீரிஸ்கள், யு-ட்யூப் குறுந்தொடர்கள் என எல்லா தளங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை அவரது உடல் சென்னையில் தகனம் செய்யப்பட இருக்கிறது!