வெற்றி மாறன் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மட்டுமல்ல; அவர் குரலற்றவர்களின் குரல், ஓரங்கட்டப்பட்டவர்களின் வரலாற்றாசிரியர். சினிமாவின் எல்லைகளை தொடர்ந்து மறுவரையறை செய்த தொலைநோக்கு பார்வையாளர். சினிமாவை எப்போதும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் உன்னதக் கலைஞர்.
வெற்றி மாறனின் தனித்துவம்!
வெற்றி மாறனின் திரைமொழி யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது படங்கள் பெரும்பாலும் வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களை, கசப்பான உண்மைகளை நேர்மையாக சித்தரிக்கின்றன. சமூகத்தின் இருண்ட பக்கத்தைக் காட்ட அவர் பயப்படவில்லை. சட்ட அமைப்பின் கொடூரம், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான போராட்டம், வாழ்க்கையின் பல பகுதிகளில் நிலவும் ஊழல் - இவை அனைத்தையும் அவர் தனது படங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.
வெற்றி மாறனின் படங்களில் அரசியல்!
வெற்றி மாறனின் படங்கள் ஆழமான அரசியல் சார்ந்தவை. பெரும்பாலும் ஒதுக்கப்பட்டவர்களை ஒடுக்கும் சமூக-அரசியல் கட்டமைப்புகளை விமர்சிக்கும் ஒரு ஸ்கிரிப்டை எழுத நேர்மையும், உண்மையும் தேவை. அந்த உண்மை வெற்றிமாறனிடம் இருப்பதால்தான் அவரால் ‘வடசென்னை’, ‘விசாரணை’ போன்ற படங்களை உருவாக்க முடிகிறது.
போலீஸ் மற்றும் நீதி அமைப்பில் உள்ள மிருகத்தனம் மற்றும் ஊழலை அவர் அம்பலப்படுத்தும் துணிச்சல்தான் வெற்றிமாறனின் அடையாளம். பெலனவற்றவர்கள் எப்படி அதிகாரத்தால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இவர் அளவுக்கு தெளிவாகச் சொன்னவர்கள் யாரும் இல்லை!
வெற்றிமாறனின் இன்னொரு தலைசிறந்த படைப்பு ‘வட சென்னை’. வடசென்னை அரசியலுக்கும், குற்றச் செயல்களுக்கும், தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான தொடர்பை இதுவரை இப்படி திரையில் யாரும் காட்டியதில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் எப்படி சாமானியர்களின் வாழ்க்கையை தங்கள் சுயநலத்திற்காக அழிக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்குகிறார்கள் என்பதை வடசென்னை தெளிவாகக் காட்சிப்படுத்தியது. வெற்றி மாறனின் அரசியல் என்பது கேள்விகளை எழுப்புவது மட்டுமல்ல. பார்வையாளர்களை மறைக்க முடியாத உண்மைகளை எதிர்கொள்ள வைப்பதும்தான்.
மறக்க முடியாத கதாபாத்திரங்கள்!
‘ஆடுகளம்’ படத்தில், தனுஷ் நடித்த கருப்பு கதாபாத்திரம், சேவல் சண்டைகளின் துரோக உலகத்தையும், அதில் உள்ள படிநிலை அமைப்புகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. நம்பிக்கை, துரோகம் மற்றும் வெற்றிக்கான விலை ஆகியவற்றை சொன்ன படம் இது.
‘அசுரன்’ படத்தில், ஒடுக்கும் உயர் சாதியினரிடம் இருந்து தனது குடும்பத்தையும் நிலத்தையும் பாதுகாக்க ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சிவசாமி என்ற மனிதனைக் காட்சிப்படுத்தினார் வெற்றிமாறன். தனுஷின் அமைதிக்கான ஆசைக்கும் வன்முறையின் தேவைக்கும் இடையில் மாட்டியிருந்த சிவசாமியின் சித்தரிப்பு, சாதியின் சங்கிலித் தொடர்பு மற்றும் அதன் வன்முறைச் சுழற்சி பற்றிய கதையை அழுத்தமாகச் சொன்னது.
வெற்றி மாறன் சினிமாவை தொடர்ந்து சமூக விமர்சனத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்திய திரைப்பட இயக்குநர். அவரது படங்கள் வெறும் பொழுதுபோக்கல்ல, சமூகத்தின் அநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் சக்திவாய்ந்த நீதி போதனைகள். அவரது பிறந்தநாளில், அவரது சினிமா சாதனைகளை மட்டுமல்ல, முக்கியமான கதைகளைச் சொல்வதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் கொண்டாடுவோம்.
வெற்றி மாறனின் திரைப்படங்கள் தொடர்ந்து பார்வையாளர்களை ஊக்கப்படுத்தவும், தூண்டவும், சவால் விடவும், அவரை சமகால தமிழ் சினிமாவின் மிக முக்கியமான குரல்களில் ஒருவராகவும் கொண்டாட்டும்…தோளில் தூக்கி சுமக்கட்டும்! பிறந்த நாள் வாழ்த்துகள் வெற்றிமாறன்!