வேட்டையன் - ரஜினிகாந்த், துஷாரா 
சினிமா

‘வேட்டையன்’ : தன்னை வாழவைத்த தெய்வங்களான ரசிகர்களுக்கு ரஜினி திருப்பித் தருவது இதைத்தானா?

என்கவுன்டர் கொலைகளில் ஏன் எப்போதும் எளிய சமூகத்தின் மனிதர்களே கொல்லப்படுகிறார்கள் என்பது படம் எழுப்பியிருக்கும் ஆழமான கேள்வி. ஆனால்?!

Suresh Kannan

‘வேட்டையன்’ திரைப்படம் ‘’மாஸாகவும் இருக்கிறது, அதே சமயத்தில் கிளாஸாகவும் இருக்கிறது’’ என்று ரஜினியின் ரசிகர்கள் உள்ளிட்டு பொதுவான பார்வையாளர்களும் கொண்டாடி வருகிறார்கள். உண்மையில் இந்த அம்சத்தைத்தான் படத்தின் மிகப் பெரிய பலவீனமாகப் பார்க்கிறேன். ஏனெனில் இந்தப்படம் கமர்ஷியல் திரைப்படமாகவும் அல்லாமல் ஒரு தீவிரமான பிரச்னையை ஆழமான தொனியில் அலசும்  மாற்று முயற்சியாகவும் அல்லாமல் இரண்டுங்கெட்டானாக தடுமாறியிருக்கிறது. 

உச்ச நடிகர்களின் வணிக வெறிக்கு பலியாகும் இயக்குநர்கள் பட்டியலில் ஞானவேலும் தானாகச் சென்று மாட்டிக் கொண்டாரா என்கிற சந்தேகத்தை ‘வேட்டையன்’ திரைப்படம் வலுவாக எழுப்பியிருக்கிறது. 

துரைசிங்கங்களும் ஆறுச்சாமிகளும் ஆவேசமாக உலவிய தமிழ் சினிமாவில் என்கவுன்டர் செய்யும் அதிகாரிகளின் சாகசங்களை ரொமான்டிசைஸ் செய்துதான் இதுவரை அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. குற்றங்களை அடக்குவதற்கு கடுமையான தண்டனைதான் ஒரே வழி என்கிற காட்டுமிராண்டித்தனத்தை இந்தப் படங்கள் வழிமொழிந்திருக்கின்றன.  அதற்கு மாறாக ‘என்கவுன்டர்’ என்பதில் உள்ள ஆபத்தை முதன்முறையாக தமிழ் சினிமாவில் பேசிய படம் ‘வேட்டையன்’. ஆனால் சரியாகப் பேசியதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

வேட்டையன்

என்கவுன்டர் எனும் தற்காலிக தீர்வு!

சமூகத்தையே கொந்தளிக்கச் செய்யும் ஒரு பரபரப்பான குற்றம் நிகழும். குற்றம் சாட்டப்பட்டவர் மீது பொதுமக்கள் ஆத்திரம் கொள்வார்கள். ‘அவனைக் கொன்று ஒழி’ என்கிற கூக்குரல்கள் தொடர்ந்து கேட்கும். இந்தப் பரபரப்பை மீடியாக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும். அரசுக்கும் காவல்துறைக்கும் நெருக்கடி அதிகமாகும். எனவே குற்றவாளியை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை ‘என்கவுன்டர்’ என்கிற பெயரில் கொலை செய்தவுடன்தான் சமூகத்தின் கூட்டுமனச்சாட்சியின் ஆவேசம் சற்றாவது தணியும். மீண்டும் அடுத்த பரபரப்பான குற்றம் நிகழும் போதுதான் இது மீண்டும் விழித்துக் கொள்ளும். மீண்டும் என்கவுன்டர் கண்துடைப்பு நிகழும். 

சமூகத்தின் இந்த ஆவேசம் காரணமாக என்கவுன்டரில் கொல்லப்பட்டவர் ஒரு நிரபராதி, குற்றத்துக்கு தொடர்பே இல்லாத ஓர்அப்பாவி என்பது அவரது மரணத்துக்குப் பின்னால் தெரிய வந்தால் என்னவாகும்? இதுதான் ‘வேட்டையன்’ பேச விரும்பிய மையம். இதே கேள்வியைத்தான் மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். ஆனால் இந்த மையத்தை வேட்டையன் அழுத்தமாகப் பேசியதா?

ஏற்கெனவே குறிப்பிட்டபடி இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க  ஜனரஞ்சகமாகவும் அல்லாமல் சமூகப் பிரச்னையை தீவிரமாக அலசும் படமாகவும் அல்லாமல் திக்கு தெரியாமல் திசை மாறி குட்டிச் சுவரில் முட்டி நின்றிருக்கிறது.  

சூப்பர் ஸ்டார்களுக்கு லாபம்தான் முக்கியம்

இந்த விஷயத்தில் ரஜினிகாந்த்தை குறை சொல்லவே முடியாது. ‘’எனது படங்கள் கமர்ஷியலாக இருக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் நஷ்டமடையக் கூடாது. ரசிகர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது’’ என்பதுதான் ரஜினியின் தாரக மந்திரம். இதைத்தான் அவர் நெடுங்காலமாக வெளிப்படையாகவும் சொல்லிக் கொண்டு வருகிறார். ஏனெனில் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வது அத்தனை எளிதான விஷயம் அல்ல. எனவே வணிக நோக்கில் ஒரு அப்பட்டமான முதலாளியாக தனது டார்கெட்டில் ரஜினி மிகத் தெளிவாகவே இருக்கிறார். 

ஒரு துறை தொடர்ந்து இயங்குவதற்கு ரஜினி போன்ற பெரிய பிம்பங்கள் அவசியம். அப்போதுதான் அந்தத் துறை உயிர் வாழ முடியும். அப்போதுதான் கூடவே நல்ல திரைப்படங்களும் வெளியாக முடியும். சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் என்கிற பெயரில் நிறைய தோல்விப்படங்கள் வெளியானால் அந்தத் துறையே ஒட்டுமொத்தமாக காணாமல் போய் விடும் ஆபத்துண்டு. இது வருங்கால படைப்பாளிகளுக்கு பெரிய பின்னடைவாக போய் விடும். ஆக ரஜினியின் டார்கெட்டில் பெரிதும் குறை காண முடியாது. ஒருவகையில் அது அவசியமும் கூட. 

ஆனால் ஒரே ஒரு குறையுண்டு. ‘’என்னை வாழ வைத்த ரசிகப் பெருமக்களுக்கு’’ என்று ஒவ்வொரு மேடையிலும் சிக்னேச்சர் வாசகத்தை சொல்லி கைத்தட்டல் வாங்கும் ரஜினி, அப்படியே சினிமாத்துறையின் தரத்தையும் சற்று வாழ வைக்க முயற்சி எடுக்கலாம். அவர் சூப்பர் ஸ்டராக இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அவரது தயாரிப்பில் நல்ல சினிமாவை உருவாக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைக் கொண்டிருக்கிற இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரலாம். ஆனால் இந்த நோக்கில் அவர் எதையுமே இதுவரை செய்ததில்லை என்பது பெரிய நெருடலான விஷயம். தன்னை வாழ வைத்த தமிழ் சினிமாவிற்காக, ரஜினி இதுவரை என்ன செய்திருக்கிறார்?

அமிதாப்பச்சனை தனது குருவாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இந்தியாவிற்கே ‘சூப்பர் ஸ்டாராக’ இருந்தாலும் உச்ச வணிக அடையாளமாக ஒரு காலத்தில் இருந்தாலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு மசாலா திரைப்படங்களை குறைத்துக் கொண்டு தனது வயதுக்கேற்ற, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அமிதாப். இதே விஷயத்தை ரஜினியும் பின்பற்றலாம். என்னதான் பார்க்க கண்மூடித்தமான ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றாலும் ஒரே உதையில் இருபது பேர் பறந்து செல்லும் அபத்தங்களையெல்லாம் ரஜினி இன்னமும் செய்து கொண்டிருக்க வேண்டுமா? சரி. அது அவரது சாய்ஸ். அவருக்கான சந்தை இருக்கும் வரை இந்த அபத்தங்கள் நிற்கப் போவதில்லை.


திசை மாறி பயணித்தாரா ஞானவேல்?

‘வேட்டையன்’ திரைப்படம் மீதான அதிருப்தி, இயக்குநர் ஞானவேலின் மீதான புகாராக மாறியிருப்பதற்கு காரணம், அவரது முந்தைய திரைப்படமான ‘ஜெய்பீம்’. அத்தனை சிறந்த படமாக ‘ஜெய்பீம்’ இருந்தது.  அதிலும் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாதான் ஹீரோவாக இருந்தார். என்றாலும் படத்தின் தீவிரம் குறையாமல் உணர்ச்சிகரமாக இயக்கியிருந்தார் ஞானவேல். சமூகத்தின் கடைசிப் படிக்கட்டுகளில் இருக்கும் பழங்குடி மக்களின் மீது காவல்துறையும் அதிகாரமும் இணைந்து நிகழ்த்தும் அராஜகமான வன்முறையை உண்மையான கரிசனத்துடன் ‘ஜெய்பீம்’ பேசியிருந்தது. 

எனவே ஞானவேலின் அடுத்த திரைப்படம் அதே மாதிரியான தீவிரத்துடனும் சமூக அக்கறையுடனும் இருக்கும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. உண்மையில் ஞானவேலும் அப்படியொரு திரைப்படத்தைத்தான் எடுக்க விரும்பியிருக்கிறார் என்பது ‘வேட்டையன்’ திரைப்படத்தின் மையத்தைப் பார்க்கும் போது தெரிகிறது. ஆனால் அவர் இதற்காக ரஜினியிடம் சென்று சரண் அடைந்ததுதான் இந்தப் படத்தின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

வேட்டையன்

‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சில் ரஜினியே வெளிப்படையாகச் சொன்ன விஷயம் இது. அவர் இயக்குநரிடம் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். “இதோ பாருங்க… நீங்க சொன்ன கதை நல்லாயிருந்தது. ஆனா கருத்து சொல்றதுல்லாம் எனக்கு செட் ஆகாது. அதனால படத்துல மாஸான சீன்கள் நிறைய இருக்கணும். அதுக்கேத்த மாதிரி டெவலப் பண்ணுங்க” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். 

இயக்குநர் ஞானவேல் இந்த மாஸ் சீன்களை மிகையாகவும் படத்திற்குப் பொருந்தாத வகையிலும் அமைத்திருப்பதுதான் ‘வேட்டையன்’ படத்தின் மிகப் பெரிய குறையாக மாறியிருக்கிறது. ஒன்று அவர் ரஜினியை வைத்து இயக்க விரும்பியிருந்தால் அதற்கேற்ற கமர்ஷியல் திரைக்கதையை அமைத்து ஜோதியில் ஐக்கியமாகியிருக்கலாம். இல்லை, சொல்ல வந்து கருத்து முக்கியம் என்றால் அதற்கேற்ற நடிகரை வைத்து ‘ஜெய்பீம்’ போல் சிறந்த முறையில் இயக்கியிருக்கலாம். இப்படியாகவும் இல்லாமல், அப்படியாகவும் அல்லாமல் இரட்டைக் குதிரையில் சவாரி செய்ததால் தடுமாற்றம் என்கிற பள்ளத்திற்குள் படம் விழுந்து விட்டது. உச்ச நடிகரின் மூலம் ஒரு கருத்தைச் சொன்னால் அது பரவலாகச் சென்று சேரும் என்பது ஒருவகையில் ஓகேதான். ஆனால் அந்தப் படம் இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும். 

வேட்டையன்

இதே மாதிரியான சவாரியை இதற்கு முன்னர் பா.இரஞ்சித் சரியாக செய்திருக்கிறார். ‘கபாலி’, ‘காலா’ போன்ற படங்கள் ரஜினியின் பிம்பத்திற்கு பொருந்தும் அதே சமயத்தில் பேச வந்த அரசியலும் சரியான கலவையில் பேசப்பட்டிருந்தது. இரண்டுமே கமர்ஷியல் படங்கள்தான். என்றாலும் மாஸான காட்சிகளை அளவாக வைத்து அனைத்துப் பாத்திரங்களும் நடிப்பதற்கான ஸ்பேஸை சரியாக உருவாக்கியிருந்தார் இரஞ்சித். ஆனால் வேட்டையனிலோ ரஜினிகாந்த் நின்றாலே பன்ச் வசனம், நடந்தாலே அதிரடி பிஜிஎம், நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகள், குத்துப்பாட்டு என்று மிகையாகப் போய் குமட்டலை ஏற்படுத்தி விட்டது. 

ரஜினிக்கும் அமிதாப்பிற்கும் இடையில்  பயணித்திருக்க வேண்டிய படம்

கொடூரமான குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த ‘என்கவுன்டர்’தான் ஒரே வழி என்று நம்புகிற காவல் அதிகாரியான ஹீரோ, ஒரு அப்பாவி பலியானதும் தனது தவறை உணர்ந்து மனம் மாறி மாற்று திசையில் செல்வதுதான் படத்தின் ஒன்லைன். ஆனால் இந்த மாற்றத்திற்குப் பிறகும் தலைகள் உருண்டு கொண்டே இருக்கின்றன. நாயகனின் சாகசத்திற்காக பலர் செத்துக் கொண்டே இருக்கிறார்கள். 

படத்தின் முதல் பாதி முழுவதும் ஹீரோவை மாஸாக காட்டுவதிலேயே செலவாகி விடுகிறது. அதிலேயே பல என்கவுன்டர்கள் ஸ்டைலாக காட்டப்படுகின்றன. இப்படி என்கவுன்டர் கொலைகளை ரொமான்டிசைஸ் செய்து காட்டி விட்டு பிறகு அதுவே தவறு என்று பல்டியடித்தால் எப்படி சொல்ல வந்த கருத்து சென்று சேரும்?! 

ஃபகத் ஃபாசில்

இந்தப் படத்தின் காஸ்ட்டிங் சிறப்பாக இருந்தாலும் பெரும்பாலான நடிகர்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. ‘அமிதாப்பச்சன்’தான் இந்தப் படத்திற்கு வேண்டும் என்று அடம்பிடித்து ‘white elephant’-ஐ வாங்கிய இயக்குநர், அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறாரா என்று பார்த்தால் ஏமாற்றமாக இருக்கிறது. ‘நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடிக்கிறார்கள், தமிழில் முதன் முறையாக அமிதாப் நடிக்கிறார்’ என்கிற trivia-க்களைத் தாண்டி உருப்படியாக எதுவுமே நிகழவில்லை.

உண்மையில் இந்தப் படம் கருத்தாக்க அடிப்படையில் ரஜினிக்கும் அமிதாப்பிற்கும் இடையில் நடக்கிற மோதலாக இருந்திருக்க வேண்டும். அதற்கேற்ற வலுவான காட்சிகள், வசனங்கள் நிறைய இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு துணை நடிகர் மாதிரி, போர்வையைப் போர்த்திக் கொண்டு ஓரமாக வந்து போக வைக்கப்பட்டிருக்கிறார் அமிதாப். ஒரு என்கவுன்டர் அதிகாரி x  அதை எதிர்க்கும் மனித உரிமை நீதிபதி என்கிற வகையில் இருவருக்குமான விவாதங்களில் பல விஷயங்களை பார்வையாளர்களுக்குச் சொல்லியிருக்க முடியும். ரஜினியின் மாஸிற்கு முக்கியத்துவம் தந்த இயக்குநர் இதை தவற விட்டு விட்டார். 

வீணடிக்கப்பட்டிருக்கும் இதர பாத்திரங்கள்

மஞ்சு வாரியர் ஒரு சிறந்த நடிகை. இந்தப் படத்திற்காக அவருடைய நடிப்பும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியின் தங்கை மாதிரியான தோற்றத்தில் இருக்கிற மஞ்சு வாரியர், அவருக்கு ஜோடியாக ‘மனசிலாயோ’ என்கிற குத்துப்பாடலுக்கு ஆட வேண்டியதை மட்டுமே நம்மால் பார்க்க முடிந்தது. என்கவுன்டர் அதிகாரியின் மனைவியின் அதே போல் செய்யும் சாகசக்காட்சி அபத்தமான திருப்பமாக மட்டுமே இருந்தது. பா.இரஞ்சித்தின் படங்களில் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்பட்டிருந்தது. ஆனால் இதில் மஞ்சு வாரியர் ஊறுகாயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இந்த லட்சணத்தில் அபிராமி பற்றியெல்லாம் சொல்லவே வேண்டியதில்லை. 

இந்த காஸ்ட்டிங் வரிசையில் உருப்படியான ஒரே பாத்திரம் ஃபகத் ஃபாசில்தான். என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும், பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை உருமாற்றிக் கொள்வதில் விற்பன்னராக இருக்கிறார் ஃபகத் . ‘வேட்டையன்’ படத்தின் மிகப் பெரிய ஆறுதலே ஃபகத்தின் இயல்பான நடிப்புதான். சிரிப்புத் திருடன் சிங்காரவேலு மாதிரி அவர் செய்கிற குறும்புகளும் சாகசங்களும் ரசிக்க வைக்கின்றன. “யாரு நீ... வெளில வெயிட் பண்ணு’ என்று ரித்திகா சிங் சொல்லும் போது ‘உங்களுக்காக விண்வெளில காத்திருக்கக்கூட நான் தயார்’ என்று குறும்பாக ஃபகத் சொல்லும் காட்சியில் சுஜாதா நாவல்களில் வரும் ‘வசந்த்’ பாத்திரம் நினைவுக்கு வந்து போனது. ட்விஸ்ட் என்கிற நோக்கில் இவரது பாத்திரத்தை சாகடித்தது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சோகம். துஷாரா விஜயன் தனக்கு தரப்பட்ட வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார். ராணா வழக்கமான வில்லன்.

வேட்டையன்

‘’நூறு சதவீதம் அனிருத் வேணும்ன்னு டைரக்டர் சொன்னார். ஆனா, ஆயிரம் சதவீதம் எனக்கு அனிருத்தான் வேணும்ன்னு சொன்னேன்’’ என்று மார்க்கெட் நிலவரத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். (இளையராஜா இதைப் பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பார்?!) 

மாஸான இசையைத் தருவதில் அனிருத் சமகாலத்தில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கலாம். ஆனால் காதுகளை மட்டுமல்ல மூளையையும் கழற்றி வைத்தால்தான் அவரது இசையை ரசிக்க முடியும் போலிருக்கிறது. 

சாலையில் வேகமாக பயணிக்கும் ஒரு காரில் இருந்து தரமான ஸ்பீக்கரின் வழியாக நவீன பாணி இசையில் ‘டுடும்... டுடும்’ என்று பேஸ் அதிரடியுடன் இசை ஒலிக்கும். சில விநாடிகளில் வாகனம் கடந்து சென்று விடும் போது அந்த இசை கேட்பதற்கு வசீகரமானதாக இருக்கும். ஆனால் அதே இசை உங்களின் தலை மீது நின்று கொண்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ‘டுடும்.. டுடும்’ என்று தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தால் என்னவாகும்? தலைவலியோடு காதுப் பிரச்னைகளும் சேர்ந்து கொள்ளும். ‘’எலெக்ட்ரானிக் இசை, உங்களுடைய மூளையில் உள்ள செல்களைப் பாதிக்கும் ஆபத்தைக் கொண்டவை. லைவ்வாக வாத்தியங்களின் மூலமாக இசைக்கப்படுவதுதான் சிறந்த இசை’’ என்பது போல் இளையராஜா ஒரு மேடையில் சொன்னார். அனிருத்தின் ‘டுடும் டுடும்’ -ஐ எல்லாம் கேட்டால் அவர் என்னவாரோ?!

சமூகத்திற்கு அவசியப்படும் நிரந்தரமான தீர்வுகள்

என்கவுன்டர் கொலைகளில் ஏன் எப்போதும் எளிய சமூகத்தின் மனிதர்களே கொல்லப்படுகிறார்கள் என்பது படம் எழுப்பியிருக்கும் ஆழமான கேள்வி. ஏன் அரசியல்வாதிகளோ, கார்ப்பரேட் முதலாளிகளோ கொல்லப்படுவதில்லை? என்கவுன்டர்களில் கொல்லப்படுபவர்களில் பெரும்பாலோனோர் வெறும் ஆயுதங்கள்தான். அவர்களை ஏவி விட்டவர்கள் சொகுசான இடங்களில் பாதுகாப்பாக இருப்பார்கள். மேலும் பல என்கவுன்டர் கொலைகள், பெரிய மனிதர்களின் குற்றங்களை மூடி மறைப்பதற்காகவே நிகழ்த்தப்படுகின்றன. 

குற்றம் செய்பவர்களை கொன்று விடுவதாலோ, சமூகத்தைச் சீரழிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளை சிரமப்பட்டு கைது செய்வதாலோ குற்றங்கள் குறையாது. மாறாக ஒட்டுமொத்த சமூக அமைப்பிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். உதாரணத்துக்கு ஒரு பிரதேசம் வறுமையாக இருக்கிறது என்றால் எளிய சமூகத்தினர் பிழைப்பிற்காக குற்றங்களை கையில் எடுப்பார்கள். அங்கு கல்வி, பணிவாய்ப்பு போன்ற சீர்திருத்தங்கள் உருவாக்கப்பட்டால் நிலைமை மாறும்.  ஆனால் எளிய மக்களை அறியாமையிலேயே  தொடர்ந்து வைத்திருக்க விரும்புகிற அரசியல்வாதிகள் இதைச் செய்ய மாட்டார்கள். இம்மாதிரியான அடிப்படை மாற்றங்கள் எல்லாம் ஏற்படாதவரை குற்றங்களை மட்டுமே பிரதானப்படுத்தி பேசிக் கொண்டிருப்பது புற்றுநோய்க்கு தைலம் பூசுவது மாதிரி அபத்தமான முயற்சிதான். 

‘வேட்டையன்’ குறி வைத்ததில், விழுந்ததெல்லாம் தலைகள்தான். என்கவுன்டரின் ஆபத்தைச் சொல்ல வந்த திரைப்படம், கமர்ஷியல் பாதைக்குள் சிக்கி இந்தப் படமே என்கவுன்டர் ஆகியிருப்பது மிகப் பெரிய பரிதாபம்.