மமிதா பைஜு, விஜய், மோகன் லால் 
சினிமா

விஜய் 69 : மோகன் லால், மமிதா பைஜு, சிம்ரன்... அட்டகாசமான ஸ்டார்களோடு களமிறங்கும் ஹெச்.வினோத்

தீவிர அரசியலில் இறங்குவதற்கு முன்பாக அதாவது 2026 தேர்தலுக்கு முன்பாக விஜய் நடிக்கும் கடைசிப்படம் என சொல்லப்படும் விஜய் 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது!

Kavitha

நடிகரும், தமிழ் சினிமாவில் தளபதி எனக்கொண்டாடப்படுபவருமான விஜய் நடிப்பில் 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸானது.  படம் வெளியாகி 10-வது நாளான இன்று விஜய்யின் அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகிறது.

விஜய்யின் 69-வது படத்தை அஜித்துடன் தொடர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு'  என ஹாட்ரிக் படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குவதாக இருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த KVN எனும் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

மமிதா பைஜு

‘’ஓவர் அரசியல் வேண்டாம்’’ என ஹெச்.வினோத்திடம் விஜய் சொல்ல, ‘சதுரங்க வேட்டை’ பாணியில் மக்களைப் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனை அதனை வேடிக்கைப் பார்க்கும் அரசாங்கம், களத்தில் இறங்கும் விஜய் என்பதுபோல ஒரு கதையை தயார் செய்துவைத்திருக்கிறார்.

இந்தப்படத்துக்கான ஷூட்டிங் விஜய்யின் அரசியல் மாநாடு முடிந்ததும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடிக்க வேண்டிய காட்சிகளை டிசம்பருக்குள் முடித்துவிட்டு 2025 ஏப்ரல் தமிழ் வருடப் பிறப்புக்கு படத்தை ரிலீஸ் செய்வதுதான் பிளான். இப்படத்துக்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆதித்ய ராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. 

விஜய்

இப்படத்தில் விஜய்யுடன் மீண்டும் மோகன் லால் நடிக்க இருக்கிறார். இருவரும் இணைந்து ‘ஜில்லா’ எனும் படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த ‘பிரேமலு' படத்தில் நடித்த மமிதா பைஜு ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதுத்தவிர விஜய்யுடன் அதிகப்படங்களில் ஹீரோயினாக நடித்த சிம்ரனும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய்யின் 69-வது படமான இந்த மாஸ் படம், தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் மீண்டும் இணைவது, மமிதா பைஜு போன்ற புதுமுகங்கள் சேர்வது, ஹெச்.வினோத்தின் டைரக்ஷனில் மாபெரும் பிரச்சனையை எடுத்துச் சொல்லும் கதைக்களம் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இது விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பாக வரும் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் இப்போதே கொண்டாடத் தயாராகிவிட்டனர்.