'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில், அடுத்து இன்னொரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் முழு கவனமும் செலுத்த இருப்பதாக கடந்த பிப்ரவியில் அறிவித்தார் நடிகர் விஜய். விஜய் 69 என்கிற அடைமொழியுடன் அழைக்கப்படும் விஜய்யின் அடுத்தப்படத்தை அஜித்துடன் தொடர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு' படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது.
ஹெச்.வினோத் முதலில் சொன்ன கதைக்கு ‘’ஓவர் அரசியல் வேண்டாம்’’ எனச்சொல்லி கதையை மாற்றச்சொல்லியிருக்கிறார் விஜய். பின்னர் ஹெச்.வினோத் ‘சதுரங்க வேட்டை’ பாணியில் மக்களை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனை, அதை வேடிக்கைப் பார்க்கும் அரசாங்கம், களத்தில் இறங்கும் விஜய் என்பதுபோல ஒரு கதையை தயார் செய்துவைத்திருக்கிறார்.
விஜய் 69 படத்துக்கான ஷூட்டிங்கை இந்த ஆண்டே முடித்துவிட்டு 2025 ஏப்ரல் தமிழ் வருடப் பிறப்புக்கு படத்தை ரிலீஸ் செய்வதுதான் பிளான். ஆனால், ஹெச்.வினோத்தின் கதைக்கு இன்னும் ஓகே சொல்லாமல் விஜய் அமைதி காப்பதால் விஜய் 69 குறித்து ஒரு தெளிவு இல்லை என்கிறார்கள்.
இதற்கிடையே விஜய் தனது மேனேஜரான ஜெகதீஷ் தயாரித்த ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலனை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். மகாராஜா படம் குறித்து ஆர்வமாக அவரிடம் பேசியிருக்கும் விஜய், நித்திலனிடம் கைவசம் இருக்கும் கதைகள் குறித்தும் கேட்டிருக்கிறார். இதனால் அரசியலுக்கு முன்பாக விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது யார் என்கிற கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது.
ஆனால், விஜய்க்கு மிக நெருக்கமானவர்களோ ''ஹெச்.வினோத்தான் 'தளபதி 69' படத்தின் இயக்குநர். கதையில் கரெக்ஷன்ஸ்தான் சொல்லியிருக்கிறார். இயக்குநரை மாற்றும் எண்ணம் விஜய்க்கு இல்லை'' என்கிறார்கள்.