'கோலி சோடா', 'கோலி சோடா2' போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி நேற்று சென்னையில் திரையிடப்பட்டது. இதில் பத்திரிகையாளர்களோடு இயக்குநர் விஜய் மில்டனும் படம் பார்த்தார். அப்போது, ஸ்பாய்லராக படத்தின் ஆரம்பத்திலேயே கதையின் நாயகன் யார் என்பது பற்றி ஒரு நிமிட காட்சியை தனக்குத் தெரியாமலேயே யாரோ இணைத்து, படத்தின் சுவாரஸ்யத்தை குலைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் விஜய் மில்டன்.
அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், "இந்தக் கதையின் நாயகன் யார், எங்கிருந்து வந்திருக்கிறார் என்கிற கேள்விகளை வைத்தே இப்படத்தை எடுத்தேன். இப்போது, படத்தைப் பார்க்கும்போது நாயகன் யார் என்கிற ஒரு நிமிட காட்சியை படத்தின் ஆரம்பத்தில் எனக்குத் தெரியாமலேயே யாரோ சேர்த்திருக்கிறார்கள்.
இப்படி காட்சியை சேர்த்தால் பார்ப்பவர்களுக்கு என்ன சுவாரஸ்யம் இருக்கும்? தணிக்கைக்குச் சென்ற பிறகு வெளியீட்டிற்கு முன்பு இக்காட்சியை இணைத்திருக்கிறார்கள். இயக்குநரைக் கேட்காமல் இப்படிச் செய்ததற்காக என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள் தயவு செய்து, அந்த முதல் ஒரு நிமிடத்தை மறந்துவிட்டு பாருங்கள்" என்று பேசியிருக்கிறார்.