திருப்பதி லட்டு விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. லட்டில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்ற விஷயம் பல லட்சக்கணக்கான இந்து மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். ஹைதராபாத்தில் நடிகர் கார்த்தி ‘மெய்யழகன்’ பட விழாவிற்காக நேற்று முன் தினம் சென்றபோது அவரிடம் லட்டு தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், இது மிகவும் சென்சிட்டிவான விஷயம் என்று கூறி அதை சிரித்து கொண்டே தவிர்த்து விட்டார். இது இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. கார்த்தி லட்டு விஷயத்தை கேலி செய்யக் கூடாது என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க அதற்கு மன்னிப்பு கோரினார்.
இதனைத் தொடர்ந்து லட்டு பாவங்கள் என்ற பெயரில் இந்த விவகாரத்தை நகைச்சுவையாக பரிதாபங்கள் சேனலில் கோபி மற்றும் சுதாகர் இருவரும் பகிர்ந்திருந்தார்கள். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க அந்த வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கியிருக்கின்றனர் பாவங்கள் குழுவினர். இதற்கு அரசியல் அழுத்தம் காரணமா, குறிப்பாக பவன் கல்யாண் ஏதேனும் அவர்களை மிரட்டினாரா என்ற ரீதியில் இணையவாசிகள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதற்கு பரிதாபங்கள் குழு விளக்கம் கொடுத்திருக்கிறது. ''கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சில மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம். இதுபோல வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்’ எனக் கூறியிருக்கின்றனர்.