அசுரன் 
சினிமா

‘அசுரன்' ஏன் காலத்துக்கும் பேசப்படும் படைப்பாக உயர்ந்து நிற்கிறது?!

அறுபதுகளின் காலகட்டத்தை சித்தரிக்கும் பின்னணியில் செயற்கை தெரிந்தாலும் அவை பேசும் விஷயத்தின் முக்கியத்துவம் கருதி அந்தக் குறைகளை மன்னித்து விடலாம்.

Suresh Kannan

வெற்றிமாறன் + தனுஷ் கூட்டணியில், 2019-ல் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் நேற்றோடு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

தமிழ் சினிமாவுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான பாலம் இருக்க வேண்டும்; சிறந்த இலக்கியப் படைப்புகள்  தரமான சினிமாவாக மாற வேண்டும் என்கிற குரல் நீண்ட காலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆர்வக்கோளாறுகளைத் தாண்டி சில அரிதான முயற்சிகள் இந்த விஷயத்தைச் சரியாக சாத்தியப்படுத்தியிருக்கின்றன.

அசுரன்

அந்த வரிசையில் பூமணியின் ‘வெக்கை’ நாவலை மிகச்சிறந்த அரசியல் திரைப்படமாக மாற்றியிருக்கிறார் வெற்றிமாறன். சில கூடுதல் இணைப்புகள், ஜனரஞ்சக அம்சங்கள் போன்றவை சேர்க்கப்பட்டிருந்தாலும் நாவலின் ஆன்மா பெரிதும் சிதையாதவாறு அதன் ஜீவனைத் திரைப்படத்தில் கொண்டு வந்திருப்பது சிறப்பு.

வெற்றி மாறன் + தனுஷ் கூட்டணி மறுபடியும் சாதித்திருக்கிறது. குறிப்பாக தனுஷ் தனது நடிப்புப் பயணத்தில் ஓர் அசாதாரணமான மைல்கல்லை ‘அசுரனின்’ மூலம் தாண்டியிருக்கிறார் எனலாம். அப்படியொரு அபாரமான நடிப்பு.

சாதி, வர்க்கம், நிலத்தின் மீதான அதிகாரம்!

திருநெல்வேலியிலுள்ள ஒரு கிராமத்தின் சிறு விவசாயி தனுஷ். அந்த ஊரின் செல்வாக்குள்ள நபரான ‘ஆடுகளம்’ நரேன், சிமென்ட் ஃபாக்டரி கட்டுவதற்காக தனுஷின் நிலத்தை அபகரிக்க முயல்கிறார். இந்த விரோதம் வளர்வதின் எதிர்வினையாக தனுஷின் மூத்த மகன் வெட்டிக் கொல்லப்படுகிறான். தன் தாயின் வேதனையைச் சகிக்க முடியாத இளையமகன், அண்ணனின் மரணத்திற்குப் பழிவாங்குகிறான்.

போலிஸாரிடமிருந்தும் கொலைவெறியோடு துரத்தும் எதிரிகளிடமிருந்தும் தந்தையும் மகனும் தலைமறைவாக இருந்து தப்பி நீதிமன்றத்தில் சரண் அடைவதுதான் இந்தக் கதை.

எண்பதுகளில் தொடங்கும் இந்தத் திரைப்படம், தனுஷின் ஃபிளாஷ்பேக் வழியாக அறுபதுகளுக்கு பின் நகர்ந்து மீண்டும் திரும்ப வந்து முடிகிறது. சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்த பிரச்னைகளும் சிக்கல்களும், தென்மாவட்டக் கிராமத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் வழியாக நம் கண் முன் விரிகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளுள் ஒன்று, நிலத்தின் மீதான அதிகாரத்தை மீட்பது. இது நீண்டகாலப் பிரச்னை மட்டுமல்ல, ஏறத்தாழ இந்தியக் கிராமங்கள் அனைத்திலும் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்னை எனலாம்.

அசுரன்

பஞ்சமி நில மீட்பு, அதில் இடதுசாரி இயக்கங்களின் பங்களிப்பு, ஆதிக்கச் சாதியினரின் அவமதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செருப்பணியும் போராட்டம், கீழ்வெண்மணி சம்பவம் என்று பல முக்கியமான அரசியல் அடையாளங்களை இந்தத் திரைப்படம் தொட்டுச் செல்கிறது. இவை அனைத்துமே படத்தில் மிக இயல்பாக கலந்து செல்கின்றன. எந்தவொரு மிகையுணர்ச்சியோ, பிரசாரக் குரலோ இல்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமைக்குரலை ஒரு குடும்பத்தின் வழியாக இயல்பான திரைக்கதையில் பதிவு செய்திருக்கிறார் வெற்றி மாறன்.

தனுஷின் ‘அசுரத்தனமான’ நடிப்பு

சுமார் நாற்பது வயதுள்ள ஆசாமியாகவும், இருபது வயதுள்ள இளைஞனாகவும் நடித்துள்ளார் தனுஷ். வயதான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பாரா என்று ஆரம்பத்தில் எழுந்த அத்தனை சந்தேகத்தையும் தனது அசாதாரணமான நடிப்பால் போக்கி விட்டார் தனுஷ். தொளதொள சட்டை, இடுக்கும் கறையும் தென்படும் பல்வரிசை, நிதானமான நடை என அந்த வயதுக்குரிய பாத்திரத்தை எப்படியோ கச்சிதமாகக் கொண்டு வந்து விட்டார்.  18 வயதுப் பெண்ணைக் காதலிக்கும் இளைஞன் பாத்திரத்திலும் சரி, நடுத்தர வயதுப் பெண்ணுக்கு கணவனாக தென்படுவதிலும் சரி, எங்குமே தனுஷின் நடிப்பில் உறுத்தல் தெரியவில்லை.

‘ஏன் தந்தை இத்தனை கோழையாக இருக்கிறார்?’ என்று இளையமகன் மருகிக் கொண்டேயிருக்கும் போது ஒரு சிக்கலான தருணத்தில் தன்னுடைய இன்னொரு முகத்தின் உக்கிரத்தை தனுஷ் காட்டும் காட்சியில் ‘பாட்ஷா’, ‘விஸ்வரூபம்’ போன்ற திரைப்படங்களின் அதிரடியான திருப்பங்கள் நினைவுக்கு வந்து போகின்றன. இந்தக் காட்சி மட்டுமல்ல, தனுஷ் ஆவேசமாக வரும் சண்டைக்காட்சிகள் அனைத்துமே பார்வையாளர்களின் வரவேற்பைப் பெறுகின்றன.

அசுரன்

தமிழ் மண்ணுக்கு அந்நியமான முகமாகத் தென்பட்டாலும் மஞ்சு வாரியர் நடிப்பில் ஏதும் குறைவைக்கவில்லை. வீரம், பாசம், துயரம் என்று பல தருணங்களில் இவரது முகபாவங்கள் பளிச்சிடுகின்றன. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் வீரமும் கோபமும் உள்ள ஒரு தென்மாவட்டக் கிராமத்து இளைஞனை கண்முன் கொண்டு வந்து விடுகிறார் டீஜே அருணாச்சலம்.

தனுஷின் கூடவே காட்டில் மறைந்து அலையும் ‘துறுதுறு’ இளைய மகனாக நடித்திருக்கும் ‘கென்’னை(கருணாஸின் மகன்) மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். ‘’நம்ம அண்ணனை அவங்க கொன்னாங்க… போலீஸ்காரங்க எதுவுமே பண்ணலை. நம்ம பண்ணும் போது மட்டும் ஏன் துரத்தறாங்க?'’ என்று பல்வேறு தருணங்களில் இவன் கேட்கும் கேள்வி ஆதாரமானது. தனுஷின் முறைப்பெண்ணாக நடித்திருக்கும் ‘அம்மு அபிராமி’யும் தனது சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.

நாவலும் சினிமாவும்

வெற்றி மாறனின் ஆஸ்தான கலைஞர்களான ‘ஆடுகளம்’ நரேன், பவன், சுப்பிரமணியம் சிவா போன்றவர்களைத் தாண்டி பசுபதி, பிரகாஷ்ராஜ், பாலாஜி சக்திவேல் ஆகியோரும் முதன்முறையாக இதில் இணைந்திருக்கிறார்கள்.

எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலில் மாமனுக்கும் மருமகனுக்கும் உள்ள  பிரியமும் அன்பும் பிரத்யேகமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். அந்தப் பாத்திரத்தை உணர்ச்சிகரமாக கையாண்டிருக்கிறார் பசுபதி. சில காட்சிகளில் வந்தாலும், இடதுசாரி இயக்க வழக்கறிஞராக மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் பிரகாஷ்ராஜ். ஒரு நடிகராக பாலாஜி சக்திவேலின் முதல் திரைப்படம் இது. செல்வாக்கான மனிதர்களுக்கு சாய்வாக செயல்படும் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை இயல்பாகச் செய்துள்ளார்.

வேல்ராஜின் ஒளிப்பதிவை இந்தத் திரைப்படத்தின் ஆதார பலங்களுள் ஒன்று எனலாம். தந்தையும் மகனும் காட்டுக்குள் ஒளிந்து குட்டையைக் கடக்கும் முதல் காட்சியில் தொடங்கி, பன்றி வேட்டை, சண்டைக் காட்சிகள் போன்றவற்றில் இவரது கேமரா சிறப்பாக இயங்கியுள்ளது. நிலப்பரப்பின் விஸ்தீரணத்தைக் காட்டும் பறவைக்கோண காட்சிகள் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ராமரின் எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது. அறுபதுகளின் காலக்கட்டத்தை சித்தரிக்கும் பின்னணியில் செயற்கை தெரிந்தாலும் அவை பேசும் விஷயத்தின் முக்கியத்துவம் கருதி அந்தக் குறைகளை மன்னித்து விடலாம்.அறுபதுகளின் காலக்கட்டத்தை சித்தரிக்கும் பின்னணியில் செயற்கை தெரிந்தாலும் அவை பேசும் விஷயத்தின் முக்கியத்துவம் கருதி அந்தக் குறைகளை மன்னித்து விடலாம்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘எள்ளு வய பூக்கலையே’ பாடல் உருக்கத்தைக் கொட்டும் அதே வேளையில் பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக அந்த ‘விஸ்வரூப’ காட்சியில் ஒலிக்கும் அட்டகாசமான பின்னணி இசை பார்வையாளர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

அசுரன்

கல்வியின் மூலம் அடையும் அதிகாரம் முக்கியமானது!

வடக்கூர் x தெக்கூர் என்று நில அதிகாரத்தை முன்வைத்து பேசப்பட்டாலும் அதன் பின்னால் இயங்கும் சாதியம் அமுங்கிய குரலில் ஆனால் அழுத்தமாக பல காட்சிகளில் பேசப்படுகிறது. இந்த வகையில் நாவல் எழுதப்பட்ட தொனியை அப்படியே பின்பற்றியிருக்கிறார் வெற்றிமாறன். நாவலைத் தாண்டி இணைக்கப்பட்டிருக்கும் விஷயங்களும் சினிமாவிற்கேற்ற பாணியில் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.

படத்தின் வசனத்தை வெற்றிமாறனும் சுகாவும் எழுதியிருக்கிறார்கள். ‘எலே’ என்று இணைத்துக் கொண்டாலே அது திருநெல்வேலி வட்டார வழக்காக மாறி விட்டதாக கற்பனை செய்து கொள்ளும் அபத்தத்திற்கு நடுவில், இது சார்ந்த விஷயங்களுக்காக சுகா மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.

ஓர் இலக்கியப் படைப்பை வெகுசன மனதுக்கு இணக்கமாக மாற்றும் கலையில் வெற்றிமாறன் ஜெயித்திருக்கிறார். படத்தில் இருக்கும் வன்முறையைப் பற்றி எதிர் விமர்சனங்கள் வரக்கூடும். ஆனால் காலங்காலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் சமூகம் திமிறியெழும்போது வெளிப்படும் எழுச்சியையும் ஆவேசத்தையும் சித்தரிக்கும் போது இவற்றைத் தவிர்க்க முடியாது.

அசுரன்

தாழ்த்தப்பட்ட சமூகம் கல்வியின் மூலம்தான் அதிகாரத்தை அடைய முடியும் என்று இறுதியில் சொல்லப்பட்டிருக்கும் வசனம் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘அப்படி வந்தடைந்த பிறகு அவர்கள் நமக்கு செய்ததை நாம் செய்யக்கூடாது” என்றிருக்கும் பின்னிணைப்பு அதையும் விட முக்கியமானது.

அசுரனின் ‘பிலிம் ஃபெஸ்டிவல்’ வெர்ஷன்?

இத்தனை நேர்த்தியான படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கின்றன. ‘நாவலை வாசித்தவர்கள் அதை எதிர்பார்த்து வந்து ஏமாறாதீர்கள்’ என்று நேர்மையாக முன்பே எச்சரித்து விட்டார் வெற்றிமாறன். போலவே தன் வழக்கமான பாணியில் நிதானமாக இயக்க முடியாமல், அவசர காலத் தயாரிப்பாக உருவாக்கும் நெருக்கடி இருந்ததால் அது குறித்த திருப்தியின்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவ்வாறின்றி, வெற்றிமாறனின் வழக்கமான, சாவகாசமான பாணியில் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தால் இதன் தரம் இன்னமும் உயர்ந்திருக்கும் என்று தோன்றுகிறது.

நாவலில் தந்தையின் பாத்திரம் வீரமுள்ளவராகவும் அதைப் பார்த்து பிரமிக்கும், கற்றுக் கொள்ளும் பாத்திரமாக மகனுடையது இருக்கும். ‘விஸ்வரூப’ டிவிஸ்டிற்காக அதை சினிமா பாணிக்கு மாற்றியிருக்கிறார்கள். போலவே தனுஷ் ஒற்றை ஆளாக இருபது, முப்பது நபர்களை பந்தாடும் சாகசங்களும் மிகையாக இருக்கின்றன. இது போன்ற வணிக அம்சங்களைத் தவிர்த்து ‘பிலிம் பெஸ்டிவல்’ வெர்ஷனில் இந்தத் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தால் அது எப்படியிருக்கும் என்பதைக் காண ஆவலாக இருக்கிறது.

இவற்றையெல்லாம் தாண்டி, வெற்றிமாறன்+தனுஷ் கூட்டணியில் வந்த மிக முக்கியமான திரைப்படமாக எப்போதும் ‘அசுரன்’ நிலைத்திருக்கும்.