இயக்குநர் செல்அம் இயக்கத்தில் யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‘மஞ்சள் வீரன்’. பைக்கின் மீது அமர்ந்து கையில் சூலாயுதத்தை எறியும்படி இருந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரும் பேசுபொருளானது. இந்த நிலையில் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் செல்அம் தெரிவித்திருக்கிறார்.
இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “இந்த கதையில் கதாநாயகன் படம் முழுக்க என்னுடன் பயணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தம்பி டிடிஎஃப் வாசன் கவனம் வேறு பக்கம் உள்ளதால் 'மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து அவரை நீக்குகிறோம். அவருக்குப் பதிலாக புதிய நாயகன் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர் யார் என்பது அக்டோபர் மாதம் 15-ம் தேதி வெளியிடுவோம்.
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்தாலும் பல உறவுகள் நீடிப்பதில்லை. திருமண உறவே அப்படி இருக்கும்போது இது படம் தானே. அவர் கைது செய்யப்பட்டதால் படத்தில் இருந்து நீக்கவில்லை. அவர் வருடத்தில் 360 நாட்கள் வேறு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். ஐந்து நாட்களில்தான் அவர் சிறையில் இருக்கிறார். வில்லன் மற்றும் மற்ற நடிகர்களுக்கான போர்ஷன் படமாக்கப்பட்டுள்ளது. கதாநாயகனுக்கான போர்ஷன் புதிய நாயகன் வந்ததும் படமாக்குவோம். இதுவரை 35% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஏற்கெனவே, சில படங்களில் நடித்த ஒருவரைதான் கதாநாயகன் பரிசீலனையில் வைத்திருக்கிறோம்” என்றார்.