தூக்கமின்மை பிரச்னைக்கு நம்முடைய வாழ்க்கை முறையில் நாம் செய்யும் பல தவறுகள் காரணமாக உள்ளன. மன அழுத்தம், பயம், சில நாட்பட்ட நோய்கள், ஹார்மோன் சமச்சீரின்மை உள்ளிட்ட மருத்துவ காரணங்களும் தூக்கமின்மைக்கு காரணமாக உள்ளது. நாம் உட்கொள்ளும் காபி, மது போன்ற பிற காரணிகளும் தூக்கமின்மை, ஆழ்ந்த தூக்கமின்மை போன்ற பிரச்னைக்கு வழிவகுக்கின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடும் கூட தூக்கமின்மை பிரச்னைக்கு வழி வகுக்கும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ஆம், ஊட்டச்சத்துக் குறைபாடும் கூட தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தூக்கமின்மையால் அவதியுறுகிறார் என்றால் அவர் என்ன உட்கொள்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாம் உட்கொள்ளும் உணவில் மக்னீஷியம், துத்தநாகம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை இருந்தால் தூக்கமின்மை பிரச்னை வரலாம்.
தூக்கத்துக்குக் காரணமான மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களான மெலட்டோனின், காபா போன்றவை சுரப்பதற்கு மக்னீஷியம் அவசியமக உள்ளது. துத்தநாகம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் தடைப்படாத நீண்ட நேரத் தூக்கத்துக்கும் துணை செய்கிறது. ரேப்பிட் ஐ மூவ்மெண்ட் எனப்படும் ஆழ்ந்த தூக்க நிலையை ஒழுங்குபடுத்த கால்சியம் அவசியமாக உள்ளது. இந்த தாது உப்புக்கள் பற்றாக்குறை காரணமாக தூக்கமின்மை பிரச்னை வரலாம்.
இந்த ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையை நாம் எளிதில் அடையாளம் காண முடியும். மக்னீஷியம் பற்றாக்குறை இருந்தால் தசைப்பிடிப்பு அடிக்கடி ஏற்படும். பதற்றம் மற்றும் சோர்வான உணர்வு ஏற்படும். இது போன்ற பிரச்னை இருந்தால் மக்னீஷயம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 400 முதல் 420 மி.கி அளவுக்கும் பெண்களுக்கு 310 முதல் 320 மி.கி அளவுக்கும் மக்னீஷியம் தேவைப்படுகிறது. இதில் பற்றாக்குறை ஏற்படும் போது பல்வேறு பிரச்னைகள் வரும்.
சரிவிகித சத்தான உணவை எடுக்காதவர்கள், செரிமானக் குறைபாடு உள்ளவர்கள், வயோதிகம் காரணமாக செரிமானக் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படுவது குறையும். இதன் காரணமாக மன அழுத்தம், தூக்கமின்மை என்று பல்வேறு பிரச்னைகளும் ஏற்படும். இதை சரி செய்ய வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்தாலே போதும் என்கின்றனர் மருத்துவர்கள்!