நிபா வைரஸ் கேரளாவில் மீண்டும் பரவியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. நிபா வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் காய்ச்சல். இந்த வைரஸின் ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, சுவாசக் கோளாறுகள் ஏற்படும். பின்னர் இது மூளைக்காய்ச்சலை (என்செபாலிட்டிஸ்) ஏற்படுத்தக்கூடும்.
கேரளா மாநிலம் இதற்கு முன்பு 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் நிபா வைரஸ் பரவலை எதிர்கொண்டது. தற்போது மீண்டும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் பழங்களின் மூலம் பரவியிருக்கக் கூடும் என்றும் நேரடியாக பழங்களை உட்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பழங்களில் வெளவால்கள் மூலம் வைரஸ் பரவும் எனச்சொல்லப்பட்டிருக்கிறது. சுகாதாரத் அதிகாரிகள் பழங்கள் உண்பதைத் தவிர்க்கவும், தனிநபர் சுகாதாரத்தை பராமரிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியான கூடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு எல்லைக்குள் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.