ஜூலை 5, இரவு 7.15
நேற்றிரவு 7.15 மணிக்கு பெரம்பூர் வேணுகோபால் தெருவில் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் தன் வீட்டுக்கு வெளியே நின்று தன் சகோதரர் வீரமணி, நண்பர் பாலாஜி, டிரைவர் அப்துல் கனி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்பவர்கள்போல உணவு பையில் வெட்டுக்கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த ஆறுபேர் ஆர்ம்ஸ்ட்ராங்கை சூழ்ந்துகொண்டு வெட்ட ஆரம்பித்தனர். தடுத்த சகோதரர் வீரமணி, பாலாஜி, அப்துல் கனி ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடியது.
ஜூலை 5, இரவு 7.30
ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆர்ம்ஸ்ட்ராங்கையும், மற்ற மூவரையும் உடனடியாக மீட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டும் ஆர்ம்ஸ்ட்ராங்கின் இதயத்தை மீண்டும் செயல்படவைக்கமுடியவில்லை என்பதால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித்தொண்டர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.
ஜூலை 5, இரவு 9.30
ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது.
ஜூலை 5, இரவு 11 மணி
இரவு 11 மணியளவில் அண்ணாநகர் காவல்நிலையத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர் முன்னிலையில் ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் சரண் அடைந்தனர். இதில் முக்கியமானவர் பொன்னை பாலு. இவர் சென்னை பட்டிணப்பாக்கத்தில் வைத்து கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி. இவரோடு திருமலை, மணிவண்ணன், திருவேங்கடம், ராமு, சந்தோஷ், அருள், செல்வராஜ் ஆகியோரும் சரண் அடைந்த நிலையில் அவர்களிடம் விசாரித்த போலீஸ் இந்த 8 பேர்தான் குற்றவாளிகள் என கைது செய்தது.
ஜூலை 6, காலை 9 மணி
அரசு பொது மருத்துவமனையில் கூடிய பகுஜன் சமாஜ்வாதி கட்சியினருக்கும், போலீஸுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டம் நடந்தது. ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்து நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டதால் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டது.
நீடித்த போலீஸ் விசாரணை!
பொன்னை பாலு மற்றும் திருமலைதான் ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதில் மூளையாக செயல்பட்டவர்கள் என்கிறது போலீஸ் விசாரணை. இவருமே தென்னரசு கொலை வழக்கில் சிறையில் இருந்தபோதே ஆர்ம்ஸ்ட்ராங்கை கொல்லதிட்டமிட்டார்கள் எனவும், திருமலை ஆட்டோ ஓட்டுனர் போல கடந்த ஒரு மாதமாக ஆர்ம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை நோட்டம்விட்டு அவரைக்கொல்ல திட்டம் தீட்டிக்கொடுத்தார் என்றும் சொல்கிறது காவல்துறை! பொன்னை பாலுவுக்கு ஆற்காடு சுரேஷைக் கொன்றதுபோலவே தன்னையும் கொல்லக்கூடும் என்கிற பயம்தான் ஆர்ம்ஸ்ட்ராங்கைக் கொல்லக்காரணம் என்கிறது போலீஸ் விசாரணை.
பொது அஞ்சலி & கட்சி அலுவலகத்தில் அடக்கம்!
இன்று காலையில் இருந்தே ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பொது அஞ்சலி செலுத்தவும், அவரது உடலை பகுஜன் சமாஜ் மாநில அலுவலகத்தில் அடக்கம் செய்யவும் கோரிக்கை விடப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆனால், இப்போதுவரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. தமிழக அரசு கோரிக்கையை நிறைவேற்ற மறுப்புத்தெரிவித்துவருகிறது.
சென்னை போலீஸ் கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!
ஆர்ம்ஸ்ட்ராங்கின் கொலை அரசியல் கொலை இல்லை. ஆர்ம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எந்தத் தகவலும் போலீஸுக்கு வரவில்லை. ஆர்ம்ஸ்ட்ராங்கின் பர்சனல் துப்பாக்கி அவரிடம்தான் இருந்தது என்று பேட்டியளித்திருக்கிறார் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்.
அடக்கம் செய்வதில் நீடிக்கும் சிக்கல்!
நாளை இறுதிமரியாதை செய்ய பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தேசியத்தலைவர் மாயாவதி சென்னை வர இருக்கும் நிலையில், ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துவருவதால் சிக்கல் நீடிக்கிறது!