அருண் ஐபிஎஸ் 
செய்திகள்

பீரோ புள்ளிங் ஒழிப்பு, ஸ்டூவர்ட்புர கொள்ளையர் அழிப்பு… யார் இந்த அருண் ஐபிஎஸ்?!

சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, அருண் பொறுப்பேற்கப்போகிறார் என அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்ட அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை மாநகர கமிஷ்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார் அருண்.

Puviyarasan Perumal

சென்னை மாநகர காவல்துறை கமிஷ்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார் ஏ.அருண். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக, டிஜிபிக்கு அடுத்த ரேங்க்கில் இருந்தவரை சென்னை மாநகரத்தின் போலீஸ் கமிஷ்னராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

ரத்தோர் மாற்றப்பட்டு, அருண் பொறுப்பேற்கப்போகிறார் என அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்ட அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை மாநகர கமிஷ்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார் அருண். 

யார் இந்த அருண்?!

1998 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அருண் சேலத்தைச் சேர்ந்தவர். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவரான அருண் கராத்தே மீது அதிக ஆர்வம் கொண்டவர். நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் அது ராணுவமா, போலீஸா என்ற குழப்பத்தில் இருந்தவர் மக்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்றால் அதற்கு காவல் துறைதான் சரியானது என முடிவெடுத்து சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஐபிஎஸ் ஆகியிருக்கிறார்.

தென் மாவட்டங்களில் முதலில் பணியாற்றிய அருண், பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டார். சென்னையில் அண்ணா நகர் சரக டெபுட்டி கமிஷ்னராக இருந்தபோது வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பலை நெல்லை மாவட்டம் ஸ்டூவர்ட்புரம் வரை துரத்திச்சென்று பிடித்தவர் அருண். அதேப்போல் செயின்ட் தாமஸ் மவுன்ட் துணை ஆணையாளராக இருந்தபோது சென்னையின் புறநகர் பகுதிகளில் பெரும் பிரச்சனையாக இருந்த பீரோ புல்லிங் திருடர்களை பிடித்து, அந்த கொள்ளை முறையையே அடியோடு ஒழித்தவர். அப்போது கிட்டத்தட்ட 500 கிலோ தங்கம் திருடர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகரின் டிராஃபிக் கமிஷ்னராகப் பணியாற்றினார் அருண். சென்னை மாநகரில் அமைதியையும், மக்களுக்கு பாதுகாப்பையும் தரவேண்டிய பொறுப்பு இப்போது அருணின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

வாழ்த்துகள் அருண் ஐபிஎஸ்!