நேற்று வெளியான ‘மகாராஜா’ படத்தில் ஓப்பனிங் காட்சியில் நடித்திருந்தவர் பிரதீப் கே விஜயன். ‘தெகிடி’, ‘மேயாத மான்’, ‘டெடி’, ‘இரும்புத்திரை’, ‘ருத்ரன்’ எனப் பல படங்களில் நடித்திருந்த பிரதீப் விஜயின் கடைசிப்படமாக வெளிவந்திருக்கிறது மகாராஜா.
நடிகராக மட்டுமல்லாமல் சப் டைட்டில் எடிட்டராகவும் பணியாற்றி வந்தார் பிரதீப். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் தயாரிப்பு நிறுவனத்தின் பல படங்களுக்கும் இவர்தான் ஆங்கில சப்டைட்டில்ஸ் எழுதியிருக்கிறார்.
'மகாராஜா’ படத்தின் ஓப்பனிங் சீனில் விஜய்சேதுபதி சலூன் ஓனரான தேனப்பன் ‘’இப்படி போச்சுனா ஒரு நாய்கூட கடைக்கு வராது'’ எனச்சொல்ல நாயோடு சலூன் கடைக்கு வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரதீப். நான்லீனியர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் இந்த ஓப்பனிங் சீன்தான் இரண்டாவது பாதியில் கதை நகர்வதற்கான முக்கியமானக் காட்சியாகவும் வரும்.
39 வயதான பிரதீப் விஜயன் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதிக உடல் எடைக்காரணமாகவும், கேலி கிண்டல்களாலும் டிப்ரஷனில் பிரதீப் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனாலேயே அவர் தனிமையை விரும்பி சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பாலவாக்கத்தில் தனி வீட்டில் வசித்துவந்ததாகச் சொல்கிறார்கள். டிப்ரஷனுக்காக மருந்து மாத்திரைகளையும் எடுத்துவந்திருக்கிறார் பிரதீப். இரண்டு தினங்களுக்கு முன் நண்பர்களின் போன்கால்களுக்கு பிரதீப்பிடம் இருந்து தொடர்ந்து பதில்வராமல் இருக்க வீட்டை உடைத்துப்பார்த்தபோது கழிவறையில் பிணமாக இருந்திருக்கிறார் பிரதீப்.
‘’தனியாக வசிக்கும் நண்பர்களை தொடர்ந்து கண்காணியுங்கள். அவர்கள் டிப்ரஷனில் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு உதவுங்கள்… அவர்களின் தனிமை நேரத்தை குறையுங்கள்'’ என இப்போது சோஷியல் மீடியாக்களில் விழிப்பு உணர்வு செய்திகள் பரவிவருகிறது.