நடிகை கஸ்தூரி 
செய்திகள்

பொது மன்னிப்பு கேட்டுவிட்டேன்... முன் ஜாமீன் தாருங்கள்; - நடிகை கஸ்தூரி!

திமுக, திக-வினர் தன் பேச்சை திரித்து பரப்பியதாக முன்ஜாமீன் மனுவில் குற்றச்சாட்டு!

News Tremor Desk

தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாகப் பேசியது தொடர்பாக தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தலைமறைவான நடிகை கஸ்தூரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெலுங்கு பெண்கள் பற்றி அவதூறாகப் பேசி சர்ச்சையில் சிக்கினார் நடிகை கஸ்தூரி. பின்னர் நான் அப்படிப் பேசவே இல்லை என்று மறுப்பு தெரிவித்தார். கடைசியில், மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், நடிகை கஸ்தூரி மீது தெலுங்கு அமைப்புகள் பலவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தன. விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறை தரப்பிலிருந்து நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் சம்மனை ஏற்க நடிகை கஸ்தூரி மறுத்துவிட்டார்.

இதற்கிடையே எங்கே போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்களோ என்று பயந்த நடிகை கஸ்தூரி தலைமறைவானார். அவரது மொபைல் போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நான் பொது மன்னிப்பு கேட்டுவிட்டேன், எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், "தான் பேசியதை தி.க, தி.மு.க கட்சியினர் திரித்து பரப்பிவிட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நாளை (12-ம் தேதி) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரிக்கப்பட உள்ளது. முன் ஜாமீன் கிடைத்தால் கஸ்தூரி வெளியே வருவார், அல்லது கிடைக்கும் வரை தலைமறைவாக இருப்பார் என்று அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.