கடந்த ஜூலை 5-ம் தேதி கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஏற்கெனவே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்நிலையில் நேற்று சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அதிமுக வக்கீல் மலர்கொடி, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் பிரவீன் என்கிற ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது சென்னை மாநகர போலீஸ்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்டவனும், ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல சதித்திட்டம் தீட்டியவனுமான திமுக வழக்கறிஞர் அருளின் சகோதரி மகன்தான் இந்த சதீஷ்குமார். டிரைவரான சதீஷ்குமார் கொலையாளிகள் தப்பிச்செல்ல கார் ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல், பல நாட்களாக ஆம்ஸ்ட்ராங்கை கொல்வதற்கான திட்டம் வகுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
யார் இந்த மலர்க்கொடி?!
அதிமுக-வின் வழக்கறிஞர் அணியில் உள்ளவர் மலர்க்கொடி. இவருக்கு வயது 49. அதிமுகவின் முன்னாள் மேடைப்பேச்சாளரும், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவருமான பார்டர் தோட்டம் சேகர் என்பவரின் மனைவி இவர். பார்டர் தோட்டம் சேகரை 27 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1997-ல் ராயப்பேட்டையில் மயிலை சிவக்குமார் என்பவன் தலைமையிலான ரவுடி கும்பல் வெட்டிப்படுகொலை செய்தது. கணவன் படுகொலை செய்யப்பட்டபோது மலர்க்கொடிக்கு வயது 22தான். மலர்க்கொடி - சேகரின் மகன்கள் பாலாஜி, அழகுராஜா இருவருமே அப்போது சிறுவர்கள்.
அப்பாவின் கொலைக்குப்பழிவாங்க மயிலை சிவக்குமாரை 24 ஆண்டுகள் கழித்து 2021-ல் மலர்க்கொடியின் மகன்கள் அழகுராஜா, பாலாஜி தலைமையிலான 6 பேர் கொண்ட கும்பல் சென்னை அசோக்நகரில் வைத்துப் படுகொலை செய்தது. இதற்கு முன்பாக தங்கள் தந்தையின் கொலைக்கு காரணமான அப்பாஸ் என்பவனையும் அழகுராஜாவும், பாலாஜியும் கொலை செய்திருந்தனர். இதற்குப் பழிவாங்க மலர்க்கொடி, அழகுராஜா மீது 2019-ல் சென்னை கேசினோ தியேட்டர் அருகே வைத்து கொலைமுயற்சி சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு குற்ற வழக்குகளில் மலர்க்கொடியும், அவரது மகன்களும் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் மலர்க்கொடி
இப்போது திமுக வழக்கறிஞரான அருளும், அதிமுக வக்கீல் அணியில் இருந்த மலர்க்கொடியும்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல பணபேரம் நடத்தியிருக்கின்றனர். இவர்களுக்குத் துணையாக தாமக வக்கீல் ஹரிஹரன் செயல்பட்டிருக்கிறான். ஹரிஹரன், மலர்க்கொடி வங்கிக்கணக்கில் இருந்துதான் 50 லட்சம் ரூபாய் வரை கொலையாளிகளுக்கு பணம் பரிமாற்றம் நடந்திருப்பதாகச் சொல்கிறது சென்னை போலீஸ்.
இதுத்தவிர தலைமறைவாக உள்ள பா.ஜ.க. மகளிரணி செயலாளரும், ஆற்காடு சுரேஷின் தோழியுமான புளியந்தோப்பு அஞ்சலையை போலீசார் தேடி வருகின்றனர்.