கே.பி.முனுசாமி 
செய்திகள்

பாஜக-வுடன் மீண்டும் கூட்டணியா? - ரகசியத்தைச் சொல்ல முடியாது என்ற கே.பி.முனுசாமி

எடப்பாடி பேச்சுக்கு புது விளக்கம் தந்த ஜெயக்குமார்!

News Tremor Desk

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் சூழலில், அந்த ரகசியத்தை இப்போது கூற முடியாது என்று மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, தங்கமணி ஆகியோர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக-வுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி ஜெயக்குமார் வரை பலரும் கூறி வந்தனர். ஆனால், இந்த நிலைப்பாட்டில் சமீபத்தில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. திருச்சியில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, "இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தேர்தலுக்கு உள்ளது. தேர்தல் நெருங்கும் போதுதான் யாருடன் கூட்டணி என்பது தெரியும்" என்று கூறினார். மேலும், "ஒத்த கருத்துள்ள கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து தி.மு.க ஆட்சியை அகற்றுவதே எங்கள் நோக்கம்" என்று கூறினார். இதன் மூலம் பாஜக-வுடன் கூட்டணிக்கான வாய்ப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களான கே.பி.முனுசாமி, தங்கமணியிடம் இன்று கூட்டணி தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். கே.பி.முனுசாமியிடம் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு, "அந்த ரகசியம் எல்லாம் சொல்ல முடியாது" என்றார். பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளதா என்று மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அதை அப்புறம் பேசுவோம்" என்று கூறிச் சென்றார். பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று அவர் உறுதியாகக் கூறத் தயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது, "கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதைத்தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கினார்.. ஆனால், ஊடகங்கள் அதைத் திசை திருப்பி உள்ளன. பாஜகவைத் தவிர்த்து மற்ற கட்சிகள் ஒத்த கருத்தோடு வரும்போது, இது குறித்து கட்சியும் பொதுச் செயலாளரும் முடிவு செய்வார்கள். இதைத்தான் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால் அவரது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளது. பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு" என்றார்!