ஆந்திரப் பெண்ணை மீட்கும் பணிகள் தீவிரம்..  twitter
செய்திகள்

சாலையில் திடீரென தோன்றிய ராட்சத பள்ளம்... மலேசியாவில் சுற்றுலா சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!

மலேசியாவில் புதை குழிக்குள் விழுந்த ஆந்திர பெண்ணை தேடும் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Aathini

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த  விஜயலக்ஷ்மி கலி என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண் தன் குடும்பத்தினருடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றார்.  கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் உள்ள ​​`ஜாலான் மஸ்ஜித் இந்தியா’ என்னும் பிரபல சுற்றுலாப் பகுதிக்கு அவர்கள் சென்றனர். இந்தியர்கள் அதிகம் பார்வையிடும் அந்த பகுதியில் எப்போதுமே கடைகள், மக்கள் கூட்டம் என நெரிசலாக இருக்கும். 

அந்த பகுதியில் இருக்கும் ஒரு கோயிலில் காலை உணவு சாப்பிடுவதற்காக விஜய லஷ்மி குடும்பத்தினர் நடந்து சென்றனர். அப்போது  அவர்கள் நடந்து சென்ற நடைபாதையில் திடீரென ஒரு புதைக்குழி உருவானது. அதில் விஜயலஷ்மி தவறி விழுந்தார். அப்பகுதியில் இப்படி இதற்கு முன்பு நடந்ததில்லை என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆந்திர பெண் குழியில் விழுந்ததும் உள்ளிழுக்கப்பட்டார். உள்ளே சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருந்ததால் அருகில் இருந்தவர்களால் உள்ளே இறங்கி காப்பாற்ற முடியவில்லை. 

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மீட்புக் குழுவினர்  சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தனர். சாலை நடுவே உருவான குழி அருகில் தேடுதல் பணி நடந்தது. எட்டு நாளாக தேடுதல் பணி தொடர்கிறது. ஆனால் அந்த பெண்ணின் செருப்புகளை தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

தற்போது நீரில் இறங்கி நீண்ட நேரம் நீந்தக்கூடிய வீரர்களை குழிக்குள் இறக்கியுள்ளனர், ஆனால் உள்ளே மனிதக் கழுவுகள், குப்பைக்கூலங்கள் இருப்பதால் நீந்தி செல்வது கடினமாக இருப்பதாக அந்த வீரர்கள் கூறியுள்ளனர். 

விஜய லஷ்மியை தேடும் பணியில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, இந்தாக் வாட்டர் கன்சோர்டியம், உள்ளூர் அதிகாரிகள் என மலேசியாவின் பல்வேறு தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நவீன உபகரணங்களுடன் கூடிய சிறப்பு அறிவியில் குழுக்களின் உதவியை மலேசிய அரசு நாடியுள்ளது. 

அந்த சாக்கடை குழிக்குள் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபடுவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே வடிகால் அமைப்பில் உள்ள திடக்கழிவுகளை சுத்தப்படுத்தும்  உயர் அழுத்த தண்ணீர் ஜெட், ரிமோட் கேமராக்கள், ரேடார்கள் போன்ற சிறப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. எட்டாவது நாளாக தொடரும் தேடுதல் பணியில் அனைத்து அமைப்புகளுடனும் கோலாலம்பூர் இந்திய தூதரம் தொடர்பில் இருக்கிறது. அதேபோல் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய லஷ்மி

எப்போதுமே சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழியும்  ​'ஜாலான் மஸ்ஜித் இந்தியா’ பகுதியில் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதை குழிக்குள் விழுந்த ஆந்திர பெண்ணின் உறவினர்கள் கண்ணீருடன் மலேசியாவில் காத்திருக்கிறார்கள். மலேசிய அரசாங்கம் அவர்களின் விசாவை நீட்டித்துள்ளது. அவர்கள் கடந்த சனிக்கிழமை இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தனர்.  இந்த சம்பவம் மலேசிய மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நடந்து செல்லும் போதே இப்படி சாலையில் புதைக்குழி ஏற்பட்டால் உயிருக்கு என்ன உத்தரவாதம் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது என மலேசியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. நடைப்பாதை சாலை உடைந்து பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.