விஜய்யின் தவெக மாநாட்டு திடலில் காட்சியளிக்கும் அஞ்சலை அம்மாள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர். 1890-ம் ஆண்டு கடலூரில் பிறந்த அஞ்சலையம்மாள் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தபோதும், அரசியல் மற்றும் சமூக நிலைமைகளை ஆர்வமுடன் அறிந்துகொண்டு பயணித்தவர். ஆங்கிலேயரின் ஆட்சியில் துயருறும் மக்களின் நிலையை மாற்ற காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டது அஞ்சலை அம்மாளின் சமூகப் போராட்டத்திற்கான முதல் நிகழ்வாய் அமைந்தது.
1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் இந்திய போராளிகள் கொலை செய்யப்பட முக்கியக் காரணமாக இருந்த நீலனுக்கு சென்னையில் சிலை இருந்தது. அஞ்சலையம்மாள், தனது ஒன்பது வயது மகள் அம்மாகண்ணுவையும் சேர்த்து, இந்த சிலையை அகற்றும் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். இதன் போது இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர். தாயும் மகளும் இணைந்து சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டாலும், அஞ்சலையம்மாள் தன் மகளை உறுதியான நாட்டுப்பற்றாளராக வளர்த்தார்.
1932-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அஞ்சலையம்மாள் கர்ப்பிணியாக இருந்தபோதும் சிறைச் செல்லத் தயங்கவில்லை. ஒரு மாதம் சிறையிலிருந்து வெளியில் வந்து தன் மகனைப் பெற்றெடுத்தார். பிறந்ததிலிருந்து இரு வாரங்களே ஆன அந்தக் குழந்தையோடு மீண்டும் சிறைக்குச் சென்று போராட்டத்தைத் தொடர்ந்தார். தாயக விடுதலைக்காக பின் வாங்காத அவரது உறுதியான பாதை, ஒவ்வொரு இந்தியருக்கும் உற்சாகத்தை அளித்தது. காந்தியடிகள் அஞ்சலை அம்மாளை ‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என்று பாராட்டியுள்ளார்.
அஞ்சலையம்மாளின் வீடு நாடு முழுவதிலிருந்து வந்த தொண்டர்களால் நிரம்பியிருக்கும். சுதந்திரத்திற்கு பிறகு, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். மக்கள் சேவையில் தனது தொகுதிக்கு பல நன்மைகளைச் செய்ய முனைந்த அவர், தீர்த்தாம்பாளையத்துக்கான குடிநீர் பிரச்னையை தீர்க்க முடிவெடுத்தார். வீராணம் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலாக நிர்மாணம் செய்து, தீர்த்தாம்பாளையத்திற்கு நீர் கொண்டு வந்தது இதன் அடிப்படையில் உருவான முக்கிய சாதனை.
கடலூர் அஞ்சலையம்மாள் போன்ற வீரப் பெண்மணிகளைப் பற்றி அறிந்து, அவர்களின் தியாகத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டியது நம் கடமை. அந்தவகையில் தனது மாநாட்டில் அஞ்சலை அம்மாளுக்கு கட் அவுட் வைத்திருக்கும் விஜய்யை பாராட்டலாம்!