பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவரும், வடசென்னையின் முக்கிய தலித் பிரபலமுமான கே.ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி மாலை அவரது வீட்டின் முன்பாகவே 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். படுகொலை நிகழ்ந்த நான்கு மணி நேரத்தில் கொலையை நிகழ்த்திய 8 பேருமே சரணடைய ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்க ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக சுரேஷின் தம்பி பொன்னை பாலு வாக்குமூலம் அளித்தாக போலீஸ் சொன்னது.
ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தொடங்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வரை ‘’உண்மைக்குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும், சரண் அடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை’’ என சந்தேகம் கிளப்ப, சென்னை போலீஸ் கமிஷ்னராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அருண் கமிஷ்னராக நியமிக்கப்பட்டார்.
உடனடியாக ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட, முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த என்கவுன்ட்டரே கைதானவர்கள் அத்தனைப் பேருக்கும் உண்மையானத் தகவலை சொல்லவில்லை என்றால் சுட்டுக்கொல்வோம் என்பதற்கான எச்சரிக்கை என சொல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொன்னை பாலு கொடுத்த தகவலின் பேரில் அடுத்தடுத்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பெண் ரவுடிகளான மலர்க்கொடியும், அஞ்சலையும் கைது செய்யப்பட்டப்பிறகு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய உறவினர் போல தன்னை அடையாளப்படடுத்திக்கொண்டு, ‘’அங்கிள்'’ என்று ஆம்ஸ்ட்ராங்கை சொந்தம் கொண்டாடி, சிறையில் இருக்கும் தந்தை நாகேந்திரன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்சில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது!
யார் இந்த நாகேந்திரன்?!
90-களில் சென்னையின் முக்கிய ரவுடியாக இருந்த வெள்ளை ரவியின் கூட்டாளிதான் நாகேந்திரன். வியாசார்பாடியைச் சேர்ந்த நாகேந்திரனுக்கு தற்போது 53 வயது. மூணு வெட்டு நாகேந்திரன் என்பதுதான் இவரது அடையாளம். அதாவது மூணே வெட்டில் ஒருவரைக் கொன்றுவிடுவாராம் நாகேந்திரன். அந்த அளவுக்கு கொலை செய்வதில் கை தேர்ந்தவர் என்கிறார்கள்.
1997-ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்தவரும், வியாசார்பாடியில் ‘பாலாஜி ஒயின்ஸ்' எனும் மதுபானக் கடையை நடத்திவந்தவருமான ஸ்டான்லி சண்முகம் என்பவரை மாமூல் தராத தகராறில் வீட்டுக்குள் போய் கொன்ற வழக்கில்தான் இப்போது ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் இருக்கிறார் நாகேந்திரன். இவருடன் இந்த கொலையைச் செய்த ‘மின்ட்’ ரமேஷ் என்பவர் நன்னடைத்தைக் காரணமாக விடுதலை செய்யப்பட்டுவிட்டார். ஆனால், நாகேந்திரனோ சிறையில் இருந்தாலும் தொடர்ந்து பல்வேறு குற்றங்களுக்கு மூளையாகச் செயல்பட்டுவந்திருக்கிறார்.
நாகேந்திரனுக்கு விசாலாட்சி என்கிற மனைவியும், அஸ்வத்தாமன் உள்பட இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 1998 முதல் நாகேந்திரன் சிறையில் இருந்தாலும் 35-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் சிறையில் இருந்தபடியே கைது செய்யப்பட்டுவந்துள்ளார். சிறைக்குள் மொபைல் போன், சிறைக்குள்ளேயே பெரிய ரவுடி பட்டாளம் என மிகவும் செல்வாக்கோடு இருந்துவந்துள்ளார் நாகேந்திரன்.
நாகேந்திரன் Vs ஆம்ஸ்ட்ராங்
நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் நேரடியாகப் பிரச்சனை ஆரம்பித்தது தென்னரசு கொலையில் இருந்துதான் என்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும், பகுஜன் சமாஜ் கட்சியில் பொறுப்பில் இருந்தவருமான தென்னரசு கடந்த 2015-ம் ஆண்டு திருவள்ளூர் அருகேயுள்ள தாமரைப்பாக்கத்தில் குடும்பத்தினரின் கண் முன்பாகவே வெட்டிக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கும் சிறையில் இருந்தபடியே ஆற்காடு சுரேஷுக்கு திட்டம்போட்டுக்கொடுத்தது நாகேந்திரன்தான் என போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இங்கிருந்துதான் ஆம்ஸ்ட்ராங்குக்கும், நாகேந்திரனுக்கும் இடையே நேரடிப் பகை ஆரம்பமானதாகச் சொல்லப்படுகிறது.
அங்கிள் ஆம்ஸ்ட்ராங்!
அப்பாவுக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் பிரச்சனை இருந்தாலும், நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங்கை அங்கிள் என அழைத்து, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்று, ஆம்ஸ்ட்ராங்கின் வழக்கறிஞர் படையில் ஒருவர் போலவே இருந்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் கைதியான நாகேந்திரனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது நாகேந்திரனின் உடல்நலனைக் காட்டி மகன் அஸ்வத்தாமன் மின்ட் ரமேஷை விடுதலை செய்ததுபோல விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், போலீஸார் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அவரை விடுதலை செய்ய மறுத்தனர்.
‘’ஒரு ரவுடிக்கு, அதுவும் ஆயுள் தண்டனை கைதிக்கு தனியார் மருத்துவமனையில் வைத்து பல லட்சம் செலவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு பணம் இருக்கிறது என்றால் அவர் சிறையில் இருந்தபடியே என்னவெல்லாம் செய்வார் என்று யோசித்துப்பாருங்கள்'’ என்று அப்போதைய காவல்துறை அதிகாரி பத்திரிகையாளர்களிடம் சொன்னார். ‘’நாகேந்திரன் சிறையில் இருப்பதும் ஒன்றுதான். வெளியில் இருப்பதும் ஒன்றுதான். சிறையில் இருப்பதால் அவரது குற்ற நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார் அந்த போலீஸ் அதிகாரி!
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அதனைக் காரணம் காட்டி ஆண்டுக்கு ஒருமுறை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரோலில் வரும் நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனுக்கு என்னென்ன செய்யவேண்டும் என வழிகாட்டி வந்ததாகச் சொல்லப்படுகிறது.
90-களில் வியாசார்பாடியில் குடோன் முதல் கன்டெய்னர்கள் வரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வியாபாரம் நடத்திவந்தவர் நாகேந்திரன். அந்தத் தொழில் அஸ்வத்தாமன் மூலம் தடையின்றி நடக்க ஆம்ஸ்ட்ராங்கும், அவரது கூட்டாளிகளும் தடையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு சோழாவரம் அருகே பொன்வண்டு எனும் சோப் நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்த 150 ஏக்கர் நிலத்தை விற்பதில் பகுஜன் சமாஜ் கட்சியின் சேகர் என்பவருக்கும், அஸ்வத்தாமனுக்கும் பிரச்சனை எழுந்திருக்கிறது. இதில் ஆம்ஸ்ட்ராங் தலையிட்டு அஸ்வத்தாமனை ஒதுங்கச்சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தை அஸ்வத்தாமன் நாகேந்திரனிடம் சொல்ல அங்கிருந்துதான் கொலைக்கான சதி அரங்கேறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து, அந்தக் கொலைச் சம்பவத்தில் பொன்னை பாலுவையும் பயன்படுத்தினால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது என ஸ்கெட்ச் போட்டு, நாகேந்திரன் சம்போ செந்தில், சீசிங் ராஜா மூலம் இந்த கொலையைச் செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அஸ்வத்தாமன் ரவுடிகளை ஒருங்கிணைத்ததோடு, பணப்பட்டுவாடா செய்ததாகவும், கொலை நடந்தப்பின்னர் பெயிலில் எடுப்பது தொடங்கி லட்சக்கணக்கில் பணம் தரப்படும் என்று வாக்குறுதி அளித்ததாகவும் சொல்கிறார்கள். அதோடு கொலை நடப்பதற்கு முதல்நாள் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டு அடுத்தநாள்தான் சென்னை திரும்பியிருக்கிறார் அஸ்வத்தாமன்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் நாகேந்திரனையும், அஸ்வத்தாமனையும் கைது செய்திருப்பதோடு கிட்டத்தட்ட இந்த கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வந்திருக்கிறது!