நெல்சன், மோனிஷா 
செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை : மோனிஷாவிடம் இருந்து கைமாறிய 75 லட்சம்... உதயநிதியிடம் பேச முயன்றாரா நெல்சன்?

மொட்டை கிருஷ்ணன் பப், பார்ட்டி, நண்பர்களின் மூலம் மோனிஷாவுக்கு பழக்கமானதாகவும், மோனிஷாவின் வங்கிக்கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் மொட்டை கிருஷ்ணனுக்கு பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Jeeva

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. கொலை சதியை தீட்டிய முக்கிய நபர்களான அஸ்வத்தாமன், சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரில் அஸ்வத்தாமனை மட்டுமே போலீஸ் கைது செய்திருக்கிறது. சம்போ செந்தில், சீசிங் ராஜா இருவருமே வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இருவரையும் கைது செய்ய போலீஸ் தீவிர முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. அதன் ஒரு கட்டமாக சம்போ செந்திலுக்கு மிக நெருக்கமாக இருந்த மொட்டை கிருஷ்ணனை போலீஸார் பிடிக்க முயற்சி செய்ய அதற்குள் அவர் தாய்லாந்துக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் மொட்டை கிருஷ்ணன் தொலைபேசி அழைப்புகளை போலீஸார் கண்காணித்தபோது அதில் மிகவும் அதிர்ச்சிகரமான தகவலாக திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா விசாரணை வளையத்துக்குள் வந்திருக்கிறார். நேற்று மோனிஷா நெல்சனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. 

ஆம்ஸ்ட்ராங்

மொட்டை கிருஷ்ணன் பப், பார்ட்டி, நண்பர்களின் மூலம் மோனிஷாவுக்கு பழக்கமானதாகவும், மோனிஷாவின் வங்கிக்கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் மொட்டை கிருஷ்ணனுக்கு பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மோனிஷாவை அதிகமுறை தொடர்பு கொண்டு மொட்டை கிருஷ்ணன் பேசியிருப்பதாகத் தெரிகிறது. அட்வகேட் என்பதால் மொட்டை கிருஷ்ணனிடம் வழக்கு விஷயமாக மோனிஷா பேசியதாக நேற்று விசாரணையில் சொல்லப்பட்ட நிலையில், பணப்பரிமாற்றம் அடுத்த பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறது. நண்பர் என்ற முறையில் கிருஷ்ணன் பணம் கேட்டதால் 75 லட்சம் ரூபாய் கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் மோனிஷா தெரிவித்திருக்கிறார்.

மோனிஷா போலீஸ் விசாரணைக்குள் வந்திருப்பதால் அவரைக்காப்பாற்ற திரைப்பட இயக்குநர் நெல்சன் பல முயற்சிகளை எடுத்துவருகிறார். இதன் ஒரு பகுதியாக நெல்சன் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தொடர்புகொண்டு பேச முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.