வங்கதேச போராட்டம் 
செய்திகள்

வங்கதேச கலவரம்: மீண்டும் இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என அறிவித்த உச்ச நீதிமன்றம்… அமைதி திரும்புமா?

இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட, சிறைச்சாலைகள் கொளுத்தப்பட நாடே போர்க்களமாக காட்சியளிக்கிறது. தற்போது நாடு தழுவிய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு, ஆர்பாட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு போடப்பட்டுள்ளது. இருப்பினும் போராட்டம் தொடர்கிறது.

Puviyarasan Perumal

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் கலவர பூமியாக மாறி பற்றி எரிகிறது. நாடு தழுவிய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் மாணவர்களின் கடுமையான போராட்டம் தொடருவதால் தொடர்ந்து அங்கே அசாத்திய சூழல் நிலவிவருகிறது. இதற்கிடையே போராட்டத்துக்கு காரணமாக இருந்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து வேலைவாய்ப்பில் 93 சதவிகிதம் தகுதியின் அடிப்படையில்தான் வேலைவாய்ப்பு, 7 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு என அறிவித்திருக்கிறது?

கலவரத்துக்கு காரணம் என்ன?!

முன்பு பாகிஸ்தானுடன் இணைந்து கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம், இந்தியாவின் உதவியால் 1971-ம் ஆண்டில் விடுதலை அடைந்து தனி நாடானது. இதனால் அந்நாட்டில் இருக்கும் பெரும்பாலான சட்டங்கள் இந்திய சட்டங்களை போலவே இருக்கும். குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56 சதவிகிதம் வரை இருந்துவந்தது. 

வங்கதேச போராட்டம்

வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது. இதனால் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராடிவந்தனர். போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018-ல் இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.


கலவரத்தை ஏற்படுத்திய உயர்நீதி மன்ற தீர்ப்பு!

இது தொடர்பாக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்த நிலையில், ‘’ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட இடஒதுக்கீடு சட்டம் செல்லாது. மீண்டும் இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படும்’’ என்று அறிவித்தது. இதுதான் போராட்டங்கள் நடக்க காரணம்.

வங்கதேச போராட்டம்

போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புவதை உணர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனா கட்சி, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் முதலில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த வழக்கை விசாரிக்க இருப்பதாகச் சொல்ல, போராட்டம் கலவரமாக மாறியது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட, சிறைச்சாலைகள் கொளுத்தப்பட நாடே போர்க்களமாக காட்சியளிக்கிறது. தற்போது நாடு தழுவிய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு, ஆர்பாட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு போடப்பட்டுள்ளது. இருப்பினும் போராட்டம் தொடர்கிறது.

இதற்கிடையே அவசர வழக்காக இதை எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லாது என அறிவித்திருக்கிறது. வெறும் 7 சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு. மீதி 93 சதவிகிதம் தகுதியின் அடிப்படையிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து வங்கதேசத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.