அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்பைக் படுகொலை செய்வதற்கான முயற்சி நேற்று நடந்தது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
காவலர்கள், போலீஸ் அதிகாரிகள் பலர் இருந்தும் அருகில் இருந்த கட்டடத்தின் மாடியில் இருந்து 20 வயது இளைஞன் டரம்ப்பை சுட்டது அமெரிக்காவில் அரசியல் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த்தாக்குதலில் பார்வையாளர்களில் ஒருவர் அநியாமாகக் கொல்லப்பட்டதோடு, இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் தாமஸ் மேத்யூ க்ரூக்தான் ட்ரம்ப் மீதான தாக்குதலை நடத்தியவன் என FBI அறிவித்திருக்கிறது. அவனை ட்ரம்ப் மீதான தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே சுட்டுக்கொன்றது போலீஸ்.
பெத்தேல் பார்க் பகுதியைச் சேர்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக் தன்னை குடியரசுக் கட்சியை சேர்ந்தவன் என அடையாளப்படுத்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிருக்கிறது போலீஸ். FBI சிறப்பு அதிகாரி கெவின் ரோஜெக் தாமஸ் க்ரூக் ஏன் இப்படி செய்தார் என்பதற்கான காரணம் இன்னும் தெளிவாகத்தெரியவில்லை எனச்சொல்லியிருக்கிறார்.
இதற்கிடையே ட்ரம்ப் மீதான தாக்குதலைக் கண்டித்திருகிறது ரஷ்ய அரசு. ‘’டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சிக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம்தான் பொறுப்பு என்று நாங்கள் நம்பவில்லை. ஆனால், ட்ரம்ப் மீதான தாக்குதலைத் தூண்டும் சூழலை உருவாக்கியிருப்பது பைடன் அரசாங்கம்தான் என குற்றம் சாட்டியிருக்கிறது’’ ரஷ்யா.