61 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளின் வான்வழி காட்சி AFP
செய்திகள்

பிரேசிலில் கொடிய விமான விபத்து... விமானத்தை தவறவிட்ட இருவர் சொல்வது என்ன?

விமானம் விழுந்த இடத்தைச் சுற்றிலும் பல வீடுகள் காணப்படுகின்றன. ஆனால் விமானம் விழுந்த இடத்தில் ஒரு வீடு மட்டுமே சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Aathini

பிரேசில் தலைநகர் சாவ் பாலோவில் நடந்த கோர விமான விபத்தில் அதில் பயணித்த 61 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் 57 பயணிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் இருந்தனர். துரதிஷ்டவசமாக அனைவரும் இறந்துவிட்டனர்.


விமானத்திற்கு சொந்தமான வோபாஸ் ஏர்லைன்ஸின் கூற்றுப்படி, இந்த இரட்டை எஞ்சின் டர்போபிராப் (turboprop ) விமானம் பிரேசிலின் தெற்கு நகரமான பரானாவில் உள்ள காஸ்கேவலிலிருந்து சாவ் பாலோ நகரின் குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது, ஆனால் அது வின்ஹெடோ என்னும் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானது.


இந்த ஏடிஆர் ரக விமானம் கட்டுபாட்டை இழந்து சுழன்று நேராக கீழே விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Brazil plane crash

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் சாவ் பாலோ மாநில ஆளுநர் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.


2007-க்குப் பிறகு பிரேசிலின் நிகழும் மிகப்பெரிய விமான விபத்து இதுவாகும். 2007-ம் ஆண்டில், சாவ் பாலோவில் நடந்த விமான விபத்தில் 199 பேர் இறந்தனர்.

விபத்து நிகழ்ந்த பகுதி என்னவானது?

ஏடிஆர் விமானம் வின்ஹெடோ பகுதியில் விபத்துக்குள்ளான போது அங்கிருந்த உள்ளூர் மக்கள் பயத்தில் உறைந்து போனதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். விமானம் விழுந்த இடத்தைச் சுற்றிலும் பல வீடுகள் காணப்படுகின்றன. ஆனால் விமானம் விழுந்த இடத்தில்  ஒரு வீடு மட்டுமே சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய இரண்டு பயணிகள் விமானத்தை தவறவிட்டுள்ளனர். அவர்களும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்தனர். 

பிரேசில் கொடிய விமான விபத்து : விமானத்தை தவறவிட்ட இருவர் சொல்வது என்ன?

விபத்துக்குள்ளான அந்த விமானத்தை தவற விட்ட ஆட்ரியானோ ஆஸிஸ், ''நான் தாமதமாக வந்ததால் விமான நிலையத்தில் இருந்தவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. அவர்களிடம் நான் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அவர்கள் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர். கடவுள் தான் என்னை காப்பாற்றி உள்ளார்'' என்று கூறினார். 

அந்த விமானத்தை தவற விட்ட மற்றொரு பயணி ஜோஸ் பிலிப் கூறுகையில், ''நான் விமானத்தில் ஏறுவதற்கான நேரம் கடந்து வந்து விட்டது.  எனவே என்னை அனுமதிக்க முடியாது என்று ஊழியர்கள் கூறினர். நான் வாக்குவாதம் செய்தேன். தற்போது விமான விபத்து பற்றி கேள்விப்பட்டதும், என் கால்கள் நடுங்குகின்றன'' என கூறினார்.