முதலமைச்சர் ஸ்டாலின் - பிரதமர் மோடி 
செய்திகள்

சென்னை மெட்ரோவுக்கு கிடைக்கப்போகும் 7 ஆயிரத்து 425 கோடி… மோடிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஒப்பதல் அளித்திருக்கிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகள் இணைக்கப்பட இருப்பதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puviyarasan Perumal

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசின் பங்காக ₹7,425 கோடி நிதி விரைவில் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்பலாம்.

நீண்டகாலமாக மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காத நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு ஒதுக்கப்படவேண்டிய நிதியைத் தரவேண்டும் என மனு அளித்திருந்தார். இந்நிலையில்தான் நேற்று ஒன்றிய அரசு மெட்ரோ பணிகளுக்கான நிதியை விடுவிக்க ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஸ்டாலின் - மோடி

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அளிக்கப்பட்ட ஒப்புதலுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், இந்த நிதி கிடைக்கப்பெறுவதன் மூலம் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற முடியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த மெட்ரோ திட்டம் விரைவில் நிறைவடைந்தால் அது சென்னை மக்களின் தினசரி வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை!