செய்திகள்

ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் தயாரிப்பு ஆலை; முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

ஒன்பது ஆயிரம் கோடி ரூபாயில் அமையவிருக்கும் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Puviyarasan Perumal

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு பவள விழா கொண்டாட்டம் குறித்து கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவைக் கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார், செப்டம்பர் 28ம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் பவள விழா கொண்டாடப்படுகிறது.

அந்த விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் கூட்டனி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதில் நானும் சிறப்புரை ஆற்ற உள்ளேன்.

மேலும், தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி செப்டம்பர் 26, 27 தேதிகளில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்த உள்ளேன்.

அதைத்தொடர்ந்து செப்டம்பர் 28ம் தேதி காலை ராணிப்பேட்டை, பணப்பாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.9 ஆயிரம் கோடியில், 400 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு டாடா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகரன் முன்னிலையில் அடிக்கல் நாட்ட உள்ளேன்.

அதன்பிறகு பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிப்புரத்தில் நிகழும் பவள விழாவில் பங்கேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.