சீனாவில் வினோத சம்பவம் நடந்தது Unsplash
செய்திகள்

மூக்குக்குள் நுழைந்து நுரையீரலை அடைந்த கரப்பான் பூச்சி... முதியவர் உயிர் பிழைத்தது எப்படி?

இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று யோசிக்க வைக்கும் சம்பவம் ஒன்று சீனாவில் அரங்கேறியுள்ளது.

Aathini

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் 58 வயதான ஹைக்காவ். இவர் தூங்கி கொண்டிருந்த போது கரப்பான் பூச்சி ஒன்று அவரின் மூக்கினுள் சென்று விட்டது. இதனையடுத்து அவர் சுவாசப்பாதையில் பூச்சி சிக்கி கொண்டது. இதை அறியாத அந்த நபர்,  மூன்று நாட்களுக்கும் மேல் சுவாசிக்கும் போது சிரமப்பட்டார். ஒவ்வொரு முறையும் மூச்சு விடும் போதும்,  கடுமையான அசௌகரியத்தை அனுபவித்தார்.

அதன் பின்னர் ஹைக்காவ் மருத்துவ உதவியை நாடினார். ஹைக்காவ்வின் சிடி ஸ்கேன் முடிவுகள், ஒரு பூச்சி அவரது சுவாசக் குழாயில் சிக்கியிருப்பதையும், அவரது சுவாச பாதைக்குள் அது சிதைந்து கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தியது. சீன பத்திரிக்கைகளில் வெளியான செய்தியின் படி, ஹைக்காவ்  திடீரென ஒரு நாள் தூங்கி எழுந்ததும், தனது மூக்கில் ஏதோ ஊர்ந்து செல்வதையும், அது தொண்டையை நோக்கி நகர்வதையும் உணர முடிந்ததாக  மருத்துவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்

Representational Image

ஊர்ந்து செல்லும் உணர்வை பற்றி கவலைப் படாமல் அடுத்த நாள் வேலையைத் தொடர்ந்தார் ஹைக்காவ். என்ன நடந்தது என்பதை அறியாமல், ஹைக்காவ் தனது சுவாசம் துர்நாற்றமாக மிகுந்ததாக மாறுவதை மட்டும் உணர்ந்தார். அதுமட்டுமின்றி மஞ்சள் நிற சளி வெளியேற தொடங்கியது. மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் மருத்துவ உதவியை நாடினார்.  ENT நிபுணரைச் சந்தித்தார். ஆனால், அவரது மேல்புற சுவாசக் குழாயில் எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவு வந்தது. 

ஆனாலும் ஹைக்காவ் உடலில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உறுதியாக நம்பினார். டாக்டர் லியோங் என்னும் மருத்துவரை சந்தித்து பிரச்னைகளை விவரித்தார். அந்த மருத்துவர் மார்பு பகுதியின் CT ஸ்கேன் செய்ய பரிந்துரைத்தார். 

Representational Image

அதன் பின்னர் டாக்டர் லியோங், ஹைக்காவுக்கு  `bronchoscopy’ என்னும் நுரையீரலை ஆய்வு செய்யும் செயல்முறையை செய்தார். அப்போது நுரையீரலின் வலது கீழ் மடலின் அடித்தளப் பகுதியில் ஏதோ ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார். 

டாக்டர் லியோங் இதுகுறித்து  ஒடிட்டி சென்ட்ரல் என்னும் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் “ஹைக்கோவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது, ​​மூச்சுக்குழாயில் இறக்கைகளுடன் ஏதோ ஒன்று சிக்கி கொண்டிருந்ததை தெளிவாகக் கண்டேன். அந்த சிறிய உருவம் சளியால் மூடப்பட்டிருந்தது. அவற்றை அப்புறப்படுத்தி பார்த்த போது அதிர்ச்சை அடைந்தோம். அது ஒரு கரப்பான் பூச்சி,” என்று விளக்கினார். 

மேலும், கரப்பான் பூச்சி மற்றும் அதன் இறக்கைகள் கவனமாக அகற்றப்பட்டு, மூச்சுக்குழாய் நன்கு சுத்தம் செய்யப்பட்டது. இந்த செயல்முறைக்குப் பிறகு, அவரின் துர்நாற்றம்  நிறைந்த சுவாசம் சரியானது. 

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஹைக்காவ் மிகவும் நிம்மதியாக சுவாசிக்க முடிந்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.