டெல்லியைச் சேர்ந்த சுந்தரி கெளதம் எனும் பெண் 18 வயதுக்கு குறைவான சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என கடந்த 2002-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ''போக்சோ சட்டப்படி ஒரு பெண்ணை கைது செய்யமுடியாது, பெண்கள் சிறுவர்களை வன்புணர்வு செய்யமுடியாது’’ என சுந்தரி கெளதம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி தீர்ப்பளித்தார். ‘’போக்சோ சட்டத்தின் மூன்றாவது பிரிவில் இடம் பெற்றுள்ள 'அவர்' என்ற வார்த்தை ஒரு ஆணை மட்டுமே குறிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது பெண்களுக்கும் பொருந்தும். பாலினத்தைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு குற்றவாளியையும் போக்சோ சட்ட வரம்பிற்குள் சேர்க்கலாம்’’ என நீதிபதி தீர்ப்பளித்தார்.
‘’சிறுவனாக இருந்தாலும் ஒரு பெண், ஒரு ஆணை வன்புணர்வு செய்யமுடியாது. சம்பவம் நடந்தாகச் சொல்லப்படும்போது சுந்தரி கெளதமின் ஆறு வயது மகனும் அங்கே இருந்தார். டாக்டரும் பாலியல் வன்புணர்வு நடக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவது 2018-ம் ஆண்டு. ஆனால் வழக்குத் தொடரப்பட்டதோ 2022-ம் ஆண்டு. முதல் தகவல் அறிக்கையே நான்கு ஆண்டுகள் கழித்துதான் போடப்பட்டிருக்கிறது. எஃப்ஐஆரின் காலதாமதமே இது பொய் வழக்கு என்பதைச் சொல்லும்’’ என்று சுந்தரி கெளதம் சார்பாக வழக்கறிஞர்கள் வாதாடினர்.
ஆனால், இதை நீதிபதி ஏற்றுக்கொள்ளமுடியாது என மறுத்துவிட்டார். ''டாக்டரோ, ஆறு வயது சிறுவனோ எந்த ஆதாரமும் இல்லாமல் தவறு நடக்கவில்லை எனச் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது'’ என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
போக்சோ சட்டத்தின்படி பாலினத்தைப் பொருட்படுத்தாமல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கவேண்டும் என்று இந்த தீர்ப்பின்மூலம் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.