சென்னை மாநகர காவல்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன்படி சமூக வலைதளங்களில் தனிநபர் எவருடைய புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ அவர்களது அனுமதியின்றி வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால் 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆன்லைனில் தனியுரிமையை மதிக்கவும் என தலைப்பிட்டு சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ‘’தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 3 லட்சம் ரூபாய் வரை அபராதம். ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும்’’ எனக் குறிப்பிட்டுள்ளது சென்னை பெருநகர போலீஸ்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66E பிரிவின்படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி வெளியிடுவது குற்றம் என்றும், இதுதொடர்பான சைபர்கிரைம் புகார்களுக்கு 1930 எனும் உதவி எண்ணை அழைக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.