கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் நடந்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமானவன் திருவேங்கடம். ஆட்டோ டிரைவர் போல ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டையே சுற்றிவந்து அவரைக் கண்காணித்து கொலை செய்ய நேரம் குறித்தது திருவேங்கடம்தான் என விசாரணையில் திருவேங்கடம் ஒப்புக்கொண்டதாக கொலை நடந்த அடுத்த நாளே தகவலை கசியவிட்டது சென்னை மாநகர போலீஸ். இந்நிலையில்தான், இன்று அதிகாலை 5.30 மணியளவில் மாதவரத்தில் திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்ததாக போலீஸ் செய்திகுறிப்பு வெளியிட்டிருக்கிறது.
சரண் அடைந்ததாகச் சொல்லப்பட்ட திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரையும் காவலில் வைத்து ஐந்து நாட்களாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல பயன்படுத்திய ஆயுதங்களை மீட்க ரவுடி திருவேங்கடம் மாதவரம் அருகே உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவன் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சிசெய்ததாகவும், தற்காப்பு நடவடிக்கையில் போலீசார் அவனை சுட்டதில் திருவேங்கடம் காயம் அடைந்ததாகவும், உடனே திருவேங்கடம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு டாக்டர்கள் பரிசோதித்து அவன் இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 5-ம் தேதி, வெள்ளிக்கிழமை ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட 3 மணி நேரத்திற்குள் கொலை செய்ததாக பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ் மற்றும் அருள் என 8 பேர் போலீஸில் சரண் அடைந்தனர். கோகுல், விஜய் மற்றும் சிவசங்கர் என குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேர் ஜூலை 7 அன்று கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் பொன்னை பாலு தனது சகோதரர் ஆற்காடு சுரேஷின் மரணத்துக்கு பழிவாங்கவே இந்த கொலையை செய்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளான ஜூலை 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார்.
கடந்த 2015-ம் ஆண்டு பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டு ரோட்டில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தென்னரசு கொலையிலும் திருவேங்கடம் மற்றும் அருள் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே திருவேங்கடம் என்வுன்ட்டர் செய்யப்படதற்கு பின்னால் வேறு காரணம் இருக்கிறது எனவும், சிபிஐ விசாரிக்கவேண்டும் எனவும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.
‘’காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது? கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா? யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது. இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்!
இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை CBI-க்கு மாற்றவேண்டும்’’ எனச்சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!