நீதி தேவதை சிலை (Lady Justice) 
செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் கண்களைத் திறந்த நீதி தேவதை… இதற்கு முன் கண்கள் ஏன் கட்டப்பட்டிருந்தன?

உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி தலைமை நீதிபதி சந்திரசூடின் பரிந்துரையின்படி பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நீதி தேவதையின் சிலையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Jeeva

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் நீதி தேவதையின் சிலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, எல்லோரின் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள நீதி தேவதையின் கண்கள் திறந்து காணப்படுகின்றன. கையில் இருந்த வாளுக்கு பதிலாக இந்திய அரசியலைமைப்புச் சட்ட புத்தகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றங்களை தற்போதைய தலைமை நீதிபதி (CJI) டி.ஒய் சந்திரசூட் கொண்டுவந்துள்ளார். 

இந்த புதிய வடிவம் இந்திய நீதிமுறையில் சட்டம் கண்மூடித்தானாக இல்லாமல், சமூகத்தில் அனைவரையும் சமமாகக் காண வேண்டும் என்ற அரசியல் அமைப்பின் ஆணையை பிரதிபலிக்கிறது என உச்சநீதிமன்ற செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

முந்தைய நீதி தேவதை சிலை

நீதிமுறையின் முக்கிய குணாதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது சட்டம் எல்லோருக்கும் சமமானது என்கிற வரையறை. இதைக் குறிக்கும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதி தேவதையின் சிலையில் நீதி பாகுபாடின்றி எல்லோருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதை குறிக்க, கண்கள் கட்டப்பட்டிருக்கும். அதாவது உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என மனிதனைப் பார்த்து நீதி வழங்கக்கூடாது என்பதால் கண்கள் கட்டப்பட்டிருந்தன. ஆனால், தற்போது இந்திய உச்சநீதிமன்றத்தில் திறக்கப்பட்டிருக்கும் புதிய சிலையில் நீதி தேவதையின் கண்கள் திறந்திருக்கின்றன. அதாவது இந்திய சட்டம் அனைத்து மனிதர்களையும் சமமாகக் காண வேண்டியதை இது குறிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நீதி தேவதையின் கையில் உள்ள வாளுக்கு பதிலாக, தற்போது இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரதியை வைத்திருப்பது, நீதிமுறை நடைமுறையில் அதிகாரத்தைவிட, அரசியல் அமைப்பின் பங்கு மிக அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுவதாக சொல்லப்பட்டுள்ளது. வாள் அடிப்படையில், அதிகாரத்தையும், தவறுக்கு தண்டனை வழங்குவதையும் குறிக்கும். இதற்கு மாறாக, தற்போது நீதி வழங்கலில் அரசியல் அமைப்பு மிக முக்கிய பங்காக விளங்குகிறது என்பதே இந்த புதிய மாற்றத்தின் முக்கிய நோக்கம்.

ஆனால், நீதி தேவதையின் சிலையின் வலதுகையில் உள்ள தராசு அப்படியே மாற்றங்கள் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இது சமநிலையை குறிக்கும் குறியீடு. அதாவது, நீதிமன்றத்தில் ஒவ்வொரு தரப்பின் விவாதங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட்ட பிறகே தீர்ப்பு வழங்கப்படும் என்பதற்கான அடையாளமாக இது நீடிக்கின்றது.

உச்ச நீதிமன்றத்தின் 75வது ஆண்டு நிறைவையொட்டி தலைமை நீதிபதி சந்திரசூடின் பரிந்துரையின்படி இம்மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.