நிர்மலா சீதாராமன் 
செய்திகள்

நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்த அல்வா சடங்கு… அல்வா கிண்டலும் பின்னணி காரணமும் என்ன?!

மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் வரும் ஜூலை 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 5 முதல் 10 நாட்களுக்கு முன் அல்வா சடங்கு நிதியமைச்சம் அமைந்துள்ள டெல்லி நார்த் பிளாக்கில் நடப்பது வழக்கம். அந்த சடங்கு நேற்று நார்த் பிளாக்கில் நடைபெற்றது.

Jeeva

அல்வா சடங்கு என்றால் என்ன?

அல்வா சடங்கு என்பது ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்புக்கு முன் நடக்கும் ஒரு பாரம்பரிய நிகழ்வு. பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த விழா நடக்கிறது. இது பட்ஜெட்டை அச்சிடும் செயல்முறையின் தொடக்கத்தின் குறியீடே இந்த நிகழ்வு. இப்போது பட்ஜெட் முழுமையாக காகிதங்களில் அச்சடிக்கப்படுவதில்லை என்றாலும் பட்ஜெட் தயாரிப்பு தொடங்கிவிட்டது என்பதை பொதுமக்களுக்கும், அரசுக்கும் தெரியப்படுத்தும் நிகழ்வாக இது இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது. 

அல்வா சடங்கு எப்படி நடக்கிறது?

இந்த நிகழ்வின் போது, உண்மையாகவே நிதியமைச்சத்தின் தரைத்தளத்தில் உள்ள அறையில் ஒரு பெரிய பாத்திரத்தில் நெய், சர்க்கரை, கோதுமை மாவு மற்றும் பருப்புகள் சேர்த்து அல்வா சமைக்கப்படுகிறது. அல்வா தயாரானதும் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் முன்னிலையில் அல்வா பரிமாறப்படுகிறது.

நிர்மலா சீதாராமன், நிதியமைச்சக ஊழியர்கள்!

ரகசியத்தின் முக்கியத்துவம்!

அல்வா சடங்கின் முக்கிய அம்சம் ரகசியம். விழா முடிந்ததும், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அலுவலகத்தில் தான் தங்கியிருப்பர். அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பட்ஜெட் குறித்த விவரங்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது!

வெறும் அல்வா மட்டும்தானா?!

அல்வா சடங்கு என்பது வெறுமனே இனிப்பு தயாரிப்பும் பரிமாறலும் மட்டுமல்ல… இது நாட்டின் ஒரு முக்கியமான செயல்முறையின் தொடக்கத்தை குறிக்கிறது. பட்ஜெட் தயாரிப்பு ஊழியர்களின் உழைப்பு, ரகசியம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடையாளமே இந்த அல்வா நிகழ்வு!