ரூ.60 வழிபறி செய்த நபரை 27 ஆண்டுகள் கழித்து தற்போது தமிழ்நாடு போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சார்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997ம் ஆண்டு வழிபறி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அப்போது அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த வழக்கை போலீசார் அப்படியே விட்டுவிட்டனர்.
இந்த நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளை எல்லாம் முடிப்பதற்காக அமைக்கப்பட்ட மதுரை சிறப்புக் காவல்படை வசம் இந்த வழக்கு சென்றது. வழக்கை விசாரித்த போலீசார் வழிபறி செய்த பன்னீர்செல்வம் சிவகாசியில் வசித்து வருவதைக் கண்டறிந்தனர்.
சிவகாசியில் உள்ள ஒரு மதுபான பாரில் பன்னீர்செல்வம் வேலை செய்து வந்துள்ளார். வழிபறியில் ஈடுபட்டவர் இவர் தானா என்பதை உறுதி செய்துகொள்வதற்காக அவரது குடும்பத்தினரிடம் மக்கள் தொகை கணக்கெடுக்க வந்தவர்கள் போல போலீசார் சென்று தகவலை சேகரித்துள்ளனர். அதில் பழைய வழக்கில் தேடப்படும் குற்றவாளி இவர்தான் என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து சிவகாசிக்குச் சென்ற தனிப்படை போலீசார் பன்னீர்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது வேறு ஏதேனும் வழக்கு உள்ளதா என்ற விவரம் வெளியாகவில்லை. 60 ரூபாய் என்றாலும் குற்றம் குற்றம்தான் என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் 27 ஆண்டுகள் கழித்த கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் தமிழ்நாடு போலீசை கிண்டலடித்துப் பதிவிட்டு வருகின்றனர்.