இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனில் உள்ள போண்டியானக் என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஜிம்மில் உள்ள டிரெட் மில்லில் நடைப்பயிற்சி செய்த கொண்டிருந்தார். அப்போது, நிலைத் தடுமாறி விழுந்த போது பின்னல் திறந்திருந்த ஜன்னல் வழியாகக் கீழே விழுந்தார். மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் அந்த பெண் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தவறி விழும்போது ஜன்னலைப் பிடிக்க அந்த பெண் முயற்சி செய்வதை அந்த வீடியோவில் காண முடிகிறது. ஆனாலும் தவறி அவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். அதில் அவரது தலையில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று அறிவித்தனர்.
டிரெட்மில்லை ஜன்னலை நோக்கி வைக்காமல், அதைத் திருப்பி வைத்ததே அந்த பெண் கீழே விழ காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதுவும் ஜன்னலுக்கு மிக அருகில் அந்த டிரெட்மில் வைக்கப்பட்டிருந்ததாம். டிரெட்மில்லில் பயிற்சி செய்யும் போது ஒருவர் பின்பக்கம் தவறி விழுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று தெரிந்தும் ஜன்னல் ஓரத்தில் ஏன் டிரெட்மில் வைக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெளியிலிருந்து பார்ப்பதைத் தடுக்க டிரெட்மில்லை திருப்பி வைத்ததாக அந்த ஜிம்மின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், உடற்பயிற்சி செய்யும் போது ஜன்னலை திறக்க வேண்டாம் என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததாகவும், அது பழையதாகிவிட்டதால் அழிந்துவிட்டதாகவும் இதனால் தெரியாமல் அந்த பெண் ஜன்னலைத் திறந்திருக்கலாம் என்றும் ஜிம் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஜிம்மில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஜிம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுமா அல்லது மூட உத்தரவிடப்படுமா என்பத விசாரணையின் முடிவில் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்தபோது அவருடன் உடற்பயிற்சி செய்துவந்த மற்றவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜிம் ஒன்றின் பாதுகாப்பு குறைபாடு இளம் பெண் ஒருவரின் உயிரைப் பறித்திருப்பது, அதுவும் மூன்றாவது மாடியிலிருந்து விழும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு இருந்தது ஜிம் பயிற்சி செய்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.