நுசந்தாரா The Atlantic Photo
செய்திகள்

ஆபத்தில் ஜகார்த்தா... தலைநகரையே காட்டுக்குள் மாற்றும் இந்தோனேசியா... காரணம் என்ன?!

காடுகளுக்கு நடுவே ஏறக்குறைய மூன்று வருடத்தில் ஒரு பெரிய நகரத்தையே உருவாக்கி அசத்தி இருக்கிறது இந்தோனேசிய அரசு.

Aathini

தென்கிழக்காசிய நாடான இந்தோனேசியா 17,000-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய நாடாகும். இந்த நாட்டில் மொத்தம் 33 மாநிலங்கள் உள்ளன. உலகின் மிகவும் வேகமாக மூழ்கிவரும் நகரம் (world's fastest sinking megacity) என்று அழைக்கப்படும் ஜகார்த்தா பெருநகரம் இந்த நாட்டின் தலைநகரம்.


உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டின் எல்லையில் பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ளது. 

ஜகார்த்தா

ஜகார்த்தாவில் என்ன பிரச்சனை? 

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா, உலகின் மிக வேகமாக மூழ்கி வரும் பெருநகரமாக கருதப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில், நகரின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் 16 அடிக்கு மேல் குறைந்துவிட்டது. 2050 ஆம் ஆண்டுக்குள் ஜகார்த்தாவின் மூன்றில் ஒரு பகுதி நீருக்கடியில் மூழ்கக்கூடும் என்று அறிவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.

இந்த நகரம் அடிக்கடி வெள்ளம் மற்றும் நிலநடுக்கங்களுக்கும் ஆளாகிறது. ஜகார்த்தாவில் பெருகி வரும் மக்கள் தொகை, நிலத்தடி நீர் சுரண்டல் ஆகியவை பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன.

மேலும், அந்நாட்டு அரசு கடற்பரப்புகளை கவனிக்காமல் விட்டுவிட்டால், கடல் மட்டம் உயர்வதையும், தீவிரமடைந்து வரும் புயல்களையும், நகரம் மூழ்குவதையும் தவிர்க்க முடியாது என்று சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது இந்நகரம் உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல்கள், அடர்ந்த புகைமூட்டம் மற்றும் கூட்ட நெரிசல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜோகோ விடோடோ

ஜனாதிபதி ஜோகோ விடோடோ முன்வைத்த திட்டம்!

இந்தோனேசியாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஜோகோவின் ஆட்சி காலம் இந்த ஆண்டோடு முடிவடைகிறது. தலைநகர் ஜகார்த்தாவை அழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சியாக, நாட்டில் நிர்வாக தலைநகரை வேறு இடத்தில் உருவாக்கும் திட்டத்தை அவர் 2019 முன்வைத்தார். அதன்படி காடுகள் நிறைந்த `நுசந்தாரா’ என்னும் பகுதியை கட்டமைத்து, புதிய தலைநகரமாக மாற்றும் திட்டத்தை வகுத்தார்.

ஜோகோ விடோடோ, ஆகஸ்ட் 16, 2019 அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, ​​போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியிலுள்ள கிழக்கு `கலிமந்தன்’ காடுகளுக்கு நடுவே தலைநகரை மாற்றுவதற்கான தனது ஆச்சரியமான திட்டத்தை முதன் முதலில் அறிவித்தார் .

காட்டு பகுதியை நகரமாக மாற்றுவது அவ்வளவு சுலபமல்ல. ஆனாலும் இந்தோனேசியா அதனை செய்து காட்டியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காட்டு உயிரினங்கள் இதனால் பாதிக்கப்படும் என எச்சரித்து வரும் நிலையில், அப்பகுதியில் ஏற்கெனவே வசித்து வரும் பழங்குடி மக்கள் தங்கள் வீடுகளை இழக்கும் அபாயத்தில் இருக்கின்றனர். ஆனால், இதற்கிடையே காட்டுக்குள்  இந்தோனேசியா உருவாக்கி வரும் நகரத்தை பல நாடுகள் பிரமிப்புடன் பார்த்து வருகின்றன.

Joko Widodo

இந்தோனேசிய அரசு கூற்றுபடி நுசன்தாரா கட்டமைக்கும் பணிக்கு 35 பில்லியன் டாலர் நிதி தேவை. 2022 முதல் 2024 வரை, நுசந்தாராவுக்கான மாநில பட்ஜெட்டில் இருந்து 4.6 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டது. அதாவது புதிய தலைநகருக்கான மொத்த பட்ஜெட்டில் சுமார் 14 சதவீதம் ஒதுக்கப்பட்டது. மேலும் தேவைப்படும் தொகை முதலீட்டாளர்கள் மூலம் திரட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

ஐந்து கட்டமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்டுமானப் பணிகள் 2045 ஆம் ஆண்டில் முற்றிலுமாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதியில், 20,000 அரசு ஊழியர்களை ஜகார்த்தாவிலிருந்து நுசந்தாராவுக்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 38 அரசாங்க அமைச்சகங்களைச் சேர்ந்த 12,000 ஊழியர்களைக் கொண்ட ஆரம்பக் குழு டிசம்பர் 2024 இறுதிக்குள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

புதிய தலைநகரில் சுதந்திர தினம் கொண்டாடிய இந்தோனேசிய ஜனாதிபதி

அனைத்து புதிய ஊழியர்களையும் தங்க வைக்க, சுமார் 47 அடுக்குமாடி கோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன, அவற்றில் 12 கடந்த மாதம் தயாராக இருந்தன. தனி வீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மக்கள் தொகை அதிகரிப்பால் புதிய நகரத்தில் அதிகப்படியான அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஜனாதிபதியின் அரசு மாளிகை கட்டுமானங்கள் முழுமையடைந்து, ஜனாதிபதி ஜோகோ தன் புதிய கட்டிடத்தில் நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அரசு கூற்றுபடி சுற்றியுள்ள காட்டு பகுதி பாதுகாக்கப்படும், புதிய தலைநகரில், புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யப்படும். அதன் பரப்பளவில் சுமார் 10 சதவீதம் உணவு உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் 2045 க்குள் கார்பன் நியூட்ரலாக (0% கார்பன் உமிழ்வு) இருக்கும் என்கிறது இந்தோனேஷிய அரசு!