இஸ்ரேல் மக்கள் 
செய்திகள்

பொறுத்தது போதும் என பொங்கியெழுந்த ஈரான்… இஸ்ரேல் மீது 200 ஏவுகணை தாக்குதல்… கொந்தளிக்கும் அமெரிக்கா!

இஸ்ரேல் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்துக்கொன்றது. இதற்கு பதிலடியாகவும் சமீபத்தில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லாவின் மரணத்துக்கு பதிலடியாகவும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது!

News Tremor Desk

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு ஈரான் ராணுவம் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி வீசியதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இரவு முழுக்க நடந்த இந்த ஏவுகணைத் தாக்குதலில் பெரிய உயிர்சேதம் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு இஸ்ரேல் ராணுவம் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தலாம் என பொதுமக்களுக்கு பொது அறிவிப்பை வெளியிட்டது. சைரன் ஒலிகளை கேட்டால் பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்குமாறு அறிவுறுத்தியது. இதன்படி ஈரான் ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியதுமே இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் சைரன்கள் அலறின. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது இஸ்ரேல். ஈரானின் இந்த தாக்குதலுக்கு சரியான நேரத்தில், சரியான இடத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. 

ஈரானின் புரட்சிகர காவலர் படை, காசா மற்றும் லெபனானில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இஸ்ரேல் மீது இத்தகைய தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது. ஏவுகணைகள் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை தாக்க முயன்ற போதும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றில் பெரும்பாலானவற்றை இடைமறித்ததாகவும், சில ஏவுகணைகள் வெற்றிகரமாக இலக்கை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையில், ஈரான் தனது வெளியுறவு அமைச்சகத்தின் மூலம், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தற்காப்புக்காகவும், இஸ்ரேலிய இராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

தற்கொலைப்படைத் தாக்குதல்!

இதற்கிடையே டெல் அவிவ் அருகில் உள்ள ஜாஃபா எனும் நகரில் நடந்த தற்கொலைப்படைத்தாக்குதலில் 8 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இந்த மோதல், மத்திய கிழக்கில் பெரும் போர் சூழலை உருவாக்கியிருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பிரிட்டனும் களமிறங்கியிருக்கின்றன. ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யாவும், சீனாவும் உதவிகள் செய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது மூன்றாம் உலகப்போருக்கான ஆரம்பமாகவும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது!