கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியே, ஈரானின் புதிய அதிபர்மசூத் பெசெஷ்கியான் 
செய்திகள்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை : போருக்குத் தயாராகும் ஈரான்… இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் நிலவிவரும் சூழலில், ஈரானின் சிறப்பு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த இஸ்மாயில் ஹனியேவின் வீட்டுக்கு வெளியே இருந்து வீசப்பட்ட குறுகிய தூர ஏவுகணையால் ஹனியே கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Jeeva

பாலஸ்தீனத்துக்காக போராடி வரும் போராட்டக்குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் முன்னாள் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸிக்கு பதிலாக புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொல்வதற்காக ஈரான் வந்திருந்தார் இஸ்மாயில் ஹனியே.

இவர் கத்தார் தலைநகர் டோஹாவில் தங்கியிருந்து அரசியல் செய்துவந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதமே  ஹனியே ஈரான் வந்தபோது அவரைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது சரியான சூழல் அமையாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹு

இந்நிலையில் கடந்த 30-ம் தேதி புதிய அதிபர் பதவியேற்பு விழா முடிந்து ஈரானின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த ஹனியேவை வீட்டுக்கு வெளியே இருந்து ஏவுகணை வீசி கொன்றுவிட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) அறிவித்துள்ளது. “சுமார் 7 கிலோ வெடிபொருட்களைக் கொண்ட குறுகிய தூர ஏவுகணையை ஏவி ஹனியேவும் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்'’ என புரட்சிகர காவலப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இஸ்மாயில் ஹனியேவின் கொலை திட்டம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், இஸ்ரேலோ ஹனியே கொலை குறித்து எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுக்கவும் இல்லை.

ஈரானுக்குள் ஊடுறுவியிருந்த இஸ்ரேலின் உளவு அமைப்பினர் ஹனியே தங்கியிருக்கும் இடத்தை கூடவே இருந்து தெரிந்துகொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ''இது முழுக்க முழுக்க ஈரானின் பாதுகாப்பு குறைபாடு. இஸ்ரேல் ஈரானில் எலெக்ட்ரானிக் போரை முதலில் தொடங்கியிருக்கிறது. தகவல் தொடர்பு சாதனங்கள், சிக்னல்கள் இடைமறித்து கேட்கப்படுவதாலேயே இஸ்ரேலால் துல்லியமாகத் தாக்குதல் நடத்தமுடிகிறது'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இதற்கிடையே தங்கள் நாட்டுக்குள் நுழைந்து ஹனியேவைக் கொன்றிருக்கும் இஸ்ரேலுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் என ஈரானில் உள்ள சில அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் ஈரான், இஸ்ரேலிடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியிருப்பாகச் சொல்லப்படுகிறது.